திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான டன் குப்பை சேகரமாகிறது. கடந்த சில நாட்களாக இந்த குப்பை, தற்காலிகமாக திருப்பூர் வடக்கு பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையத்திலுள்ள கைவிடப்பட்ட பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பேச்சுவார்த்தை மூலமாக சமரசம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “திருப்பூர் பொங்கு பாளையம், காளம்பாளையம், கூட்டுறவு நகர், ராஜா நகர், பாரதி நகர், காளம்பாளையம், பி.ஆர்.நகர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக் கப்படுகி றோம். சுமார் 7 ஆயிரம் குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர்.
வடமாநில தொழிலாளர்களும் அதிகளவில் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. ஆயுதபூஜை பண்டிகைக்கு பிறகு, மாநகரில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக பகுதிகளில் இருந்து அதிகளவு குப்பை நாள்தோறும் சேகரமாகிறது. அதன்படி, 60 வார்டுகளிலுள்ள சுமார் 600 டன் குப்பை இங்கு கொட்டப்பட்டால், இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இதுதொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிலத்தடி நீர், காற்று மாசு, கடும் துர்நாற்றம், குப்பை வாகனங்கள் வரும் வழிநெடுக காற்றில் கலக்கும் நெடி உள்ளிட்ட வற்றால் பாதிக்கப்படுகிறோம். எடுக்கப்படும் குப்பையை அப்படியே பாறைக்குழியில் கொட்டிவிட்டு சென்றால், நிலத்தடி நீர் உட்பட அனைத்தும் மாசுபடும். அரசின் வழிகாட்டுதல்படி, திடக்கழிவு மேலாண்மையை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.
இந்த பாறைக்குழி நிறைந்ததும், அடுத்ததாக வேறொரு பகுதியில் பாறைக்குழியை தேடும் போக்கை கைவிட்டு, நிரந்தரமாக திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றும் விதமாக, ஒருங்கிணைந்த குப்பை கொட்டும் இடத்தை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக திருப்பூர் உதயமானது. தற்போது 16 ஆண்டுகளாகியும் பாறைக்குழியை தேடி வருவது வேதனையை அளிக்கிறது” என்றனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் (பொ) சுல்தானா கூறும்போது, “காளம்பாளையத் தில் குப்பை கொட்டுவது தொடர்பாக முதல் 15 நாட்கள் விதிமுறை மீறல் அல்லது விதிமீறல் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
தொடர்ச்சியாக கண்காணித்துதான் குப்பை கொட்டி வருகிறோம். கடந்த 5 நாட்களாக சாலைகளில் தேங்கிய குப்பை, தற்போது கொட்டப்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டு திருப்பூர் மாநக ராட்சியாக மாறிய பின்னர், இடுவாயில் திடக்கழிவு மேலாண்மைக்காக இடம் வாங்கப்பட்டது. ஆனால், அங்கு சோலார் மின் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களின் காரணமாக, அந்த இடம் தற்போது வேறு பயன்பாட்டில் உள்ளது.
கோவை மாநகராட்சி வெள்ளலூர் போன்று குப்பை கொட்டவும், திடக்கழிவு மேலாண்மைக்கும் திருப்பூரில் ஓர் இடத்தில் பெரிய அளவிலான இடம் இல்லாததால், தொடர்ந்து ஆங்காங்கே கொட்டி வருகிறோம்” என்றார்.