திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக 52 ஆண்டுகளாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி வனத்துறையினர் பாராட்டினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிய கொள்ளுக்குடிப்பட்டி, சின்ன கொள்ளுக்குடிப்பட்டி, வேட்டங்குடி ஆகிய 3 கண்மாய்களில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள தட்ப வெப்ப நிலைக்காகவும், இனப் பெருக்கத்துக்காகவும் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிமாநிலங்கள், ஆசியாவின் பிற நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வருகின்றன. அவை இங்குள்ள மரங்களில் கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்கின்றன. மீண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் தங்களது பகுதிகளுக்கு திரும்பிச் செல்கின்றன.
இந்தப் பறவைகளுக்காகவே அப்பகுதி மக்கள் 52 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை மற்றும் சுபநிழச்சிகள், கோயில் திருவிழாக்களில் பட்டாசு வெடிப்பதில்லை. பறவைகளுக்காக இக்கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை விட்டுத் தருகின்றனர். இதை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வனத்துறையினர் கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டி வருகின்றனர்.
அதன்படி, இன்று அப்பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு வனசரக அலுவலர் கார்த்திகேயன் இனிப்புகளை வழங்கி பாராட்டினார். வனவர் பிரவீன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கண்மாயை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக சீரமைத்து தருவதாக வனத்துறையினர் உறுதியளித்தனர்.