சிவகாசி: ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்திய அளவில் தமிழகம் முன்னேற்றத்தில் உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இன்று சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கான மொத்தமுள்ள 17 பில்லர்களில் தற்போது 15 பில்லர்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேவையான வசதிகளை செய்து, இடர்பாடுகளை களைந்து பணிகளை விரைந்து முடிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். திட்டத்திற்கான கால அளவு 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சாலை திட்டத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஒரு பகுதிக்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அடுத்த பகுதிக்கான நில எடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
காலநிலை மாற்றம் என்பது தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. மாசு ஏற்படுவதை குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழலை காப்பதற்காகவும் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. நான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழகம் முழுவதிலும் சூழல் மேம்பாட்டு திட்டங்களை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்திய அளவில் தமிழகம் முன்னேற்றத்தை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து தக்கவைக்கவும், மேலும் முன்னேற்றம் காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அமைச்சர் ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சிவகாசி மேயர் சங்கீதா, சிவகாசி மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.