மேட்டூர்: மேட்டூர் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த 3 வயதுடைய ஆண் சிறுத்தை இன்று மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தின்னப்பட்டி, வெள்ள கரட்டூர், புதுவேலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது. அப்பகுதியில் உள்ள 12 ஆடுகள், 3 கோழிகள், ஒரு நாய் ஆகியவற்றை சிறுத்தை கொன்று தின்றது. வனத்துறை சார்பில் 6 கூண்டுகள், 16 கண்காணிப்பு கேமராக்கள், 70 வன ஊழியர்கள் மூலம் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதமாக கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் வனத்துறை சோதனை சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு வெள்ள கரட்டூர், புதுவேலமங்கலம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சம்பந்தமாக ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். இந்நிலையில், இன்று காலை வெள்ளக்கரட்டூர் வனப்பகுதியில் உள்ள முனியப்பன் கோயில் அருகே சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி, உதவி வன பாதுகாவலர் செல்வகுமார், மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் உள்ளிட்ட உயிரிழந்து கிடந்த சிறுத்தையை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.
பின்னர், கால்நடை மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள் முன்னிலையில் உயிரிழந்த சிறுத்தையை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். சிறுத்தையின் உடலில் இருந்து உடல் உறுப்புகள் எடுத்து ஜஸ் பெட்டியில் கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுத்தைப் பார்க்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை வைத்தனர். பின்னர், வனத்துறை அனுமதியுடம் கிராம மக்கள் பார்த்தனர். இதையடுத்து, சிறுத்தையின் உடலை சம்பவ இடத்தில் மரக்கட்டைகளை கொண்டு தீயிட்டு எரித்தனர்.
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழந்ததால், அமைதி திரும்பியுள்ளது. கடந்த 3 வாரத்துக்கு மேலாகவே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. குறிப்பாக, சிறுத்தையை விஷம் வைத்து, அடித்து கொன்றதாக கூறப்படுவதால், வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ''வெள்ள கரட்டூர், புதுவேலமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை மர்மான முறையில் உயிரிழந்தது. சிறுத்தை உயிரிழந்தது குறித்து பிரேத பரிசோதனை செய்து மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது. இதன் அறிக்கை வந்த பிறகு தான் உயிரிழப்புக்கான காரணங்கள் தெரிய வரும். உயிரிழந்த சிறுத்தை 3 வயதுடைய ஆண் சிறுத்தையாகும். சிறுத்தை உயிரிழப்பு குறித்து வனத்துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.