பிடிபட்ட பாம்பை அப்புறப்படுத்திய வனத்துறை 
சுற்றுச்சூழல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், பிடிபட்ட பாம்பை வனத்துறை ஊழியர் பத்திரமாக அப்புறப்படுத்தினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் நீதிமன்றம், ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாரைப்பாம்பு ஒன்று இன்று (ஆக.2) சுற்றுவதாக அப்பகுதியினர், ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் ஆட்சியர் அலுவலகத்தின் 6-ம் தளத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வன காப்பாளர் ப.மணிகண்டன் தரத்தளத்துக்கு வந்து அப்பகுதியில் இருந்த புதரில் பதுங்கிய சாரைப் பாம்பை பிடித்தார். அதையடுத்து அந்தப் பாம்பை காப்புக்காடு பகுதிக்கு எடுத்துச்சென்று விடுவித்தார்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், “ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் பாம்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றை மொத்தமாக அப்புறப்படுத்தி அலுவலகத்துக்கு நாள்தோறும் வந்து செல்லும் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் அறைக்கு எதிரே உள்ள காலி இடங்களில் ஏராளமான பாம்புகள் நடமாடுவதாக கேள்விப்படுகிறோம். அவற்றையும் முழுமையாக அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT