திருநெல்வேலி நகருக்குள் பாயும் தாமிரபரணியின் இருகரைகள் மட்டுமின்றி ஆற்றுக்குள்ளும் செடிகள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுகிறது. 
சுற்றுச்சூழல்

குப்பைமேடாக காட்சியளிக்கும் மேலநத்தம் தாமிரபரணி ஆற்றங்கரை!

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மேலநத்தம் தாமிரபரணி ஆற்றங்கரை குப்பைமேடாக காட்சியளிப்பது இயற்கை ஆர்வலர்களை வேதனை அடைய வைத்துள்ளது. தாமிரபரணியின் புனிதம் காக்க வேண்டும். அதன் கரைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டும் ஆற்றங்கரைகள் அசுத்தப்படுத்தவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

தாமிரபரணி தனது பாதையில் கடக்கும் பெரிய நகரம் திருநெல்வேலி. இங்குதான் அனைத்து நகரங்களையும்விட அதிகமான கழிவுகளை தாமிரபரணி சுமக்கிறது. கழிவுகளும், குப்பைகளும் தாமிரபரணி கரையில் கொட்டப்படுவதை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகளால் தடுக்க முடியவில்லை. வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை, கருப்பந்துறை, கொக்கிரகுளம், குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை நீர் ஆறுபோல் தாமிரபரணியில் கலப்பது, இயற்கை ஆர்வலர்களை கண்ணீர்விட வைத்திருக்கிறது.

திருநெல்வேலியில் கருப்பந்துறை முதல் வெள்ளக்கோயில் வரை 27 இடங்களில் ஆற்றில் சாக்கடை கலக்கிறது. ஆட்சியர் அலுவலகம் அருகே மட்டுமின்றி ஆற்றங்கரை பகுதி முழுக்கவே திறந்தவெளி கழிப்பிடமாகவும், பன்றிகள் வளர்க்கும் இடமாகவும் மாற்றப் பட்டிருக்கிறது. ஆற்றங்கரையை தூய்மையாக வைத்திருக்கவும், ஆற்று நீரை புனிதமாக கருதி செயல்படவும் மக்கள் பலரும் விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர். திருநெல்வேலி சந்திப்பிலுள்ள அனைத்து கடைகள், தங்கும் விடுதிகளின் கழிவுகள் சிந்துபூந்துறையில் ஆற்றுக்குள் விடப்படுகின்றன.

குப்பை மேடாக காட்சியளிக்கும் மேலநத்தம் தாமிரபரணி ஆற்றங்கரை.
| படம்: மு.லெட்சுமி அருண் |

திருநெல்வேலி மாநகர பகுதிக்குள் மட்டும் 1 நிமிடத்துக்கு 11 லட்சம் லிட்டர் கழிவுநீர் தாமிரபரணியில் கலப்பதாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 686 இடங்களில் ஆற்றில் சாக்கடை கலப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கொண்டு வருகின்றன. ஆனால், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமையால் அவையெல்லாம் தோல்வியில் முடிந்துவிடுகிறது. ஆற்றங்கரையின் பெரும்பாலான பகுதிகளும் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டுவிட்டது.

திருநெல்வேலி அருகே மேலநத்தம் பகுதியில் ஆற்றங்கரை முழுக்க குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இப்பகுதியை சேர்ந்தவர்களும், சுற்றுவட்டார பகுதி மக்களும் ஆற்றங்கரை பகுதியை குப்பைக் கிடங்காக மாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குப்பைகளை அவ்வப்போது எரிப்பதால் வெளிவரும் புகைமூட்டத்தால் சுவாச பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அரசுத்துறை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுப்பதுடன், ஆற்றங்கரையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற பொறுப்புடன் பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

SCROLL FOR NEXT