புதுச்சேரி: புதுச்சேரியில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், திருமண நிலையங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் ஆகியவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 300 டன் குப்பைகள் சேரிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குப்பைகள் குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படாமல் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் ஆண்டுகணக்கில் மலைபோல் குவிந்து கிடக்கிறது. தோராயமாக 5 லட்சத்து 53 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரே இடத்தில் குவிக்கப்படும் குப்பைகள் அவ்வப்போது எரிக்கப்படுகின்றன. இதனால் காற்று மண்டலம் மாசடைகிறது. மழைகாலங்களில் இந்த குப்பைகள் மக்கி பேட்டரி, மருந்து உள்ளிட்ட வேதிப் பொருட்கள் மழைநீரில் கலந்து பூமிக்கு அடியில் சென்று தண்ணீரை மாசுபடுத்துகிறது. இதனால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும் அபாய சூழலும் உள்ளது. இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம், புதுச்சேரியில் பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைமேடுகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து புதுச்சேரி அரசு, அறிவியல் முறைப்படி ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சென்னையைச் சேர்ந்த ‘கிரீன் வாரியர்’ என்ற நிறுவனம் குருமாம்பேட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரமாக மாற்றும் திட்டத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கியது.
இதில் பிளாஸ்டிக், கண்ணாடி ஓடுகள், பீங்கான், இரும்பு என மக்காத குப்பைகளையும், உணவு, பழம், காய்கறி கழிவுகள்உள்ளிட்ட மக்கும் குப்பைகளையும் பிரிக்கின்றனர். மக்காத பொருட்களை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். மக்கும் பொருட்களை உரமாக்க சில பாக்டீரியாக்களை தெளித்து இயற்கை உரமாக மாற்றி வருகின்றனர்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட 50 டன் அளவுள்ள இந்த இயற்கை உரத்தை புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. கடந்த வாரம் முதல்முறையாக சவுக்கு பயிர்களுக்கு இந்த இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விவசாய பயிர்களுக்கும் இந்த உரம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறும்போது, “புதுச்சேரியில் மண்வளம் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாத்திடும் வகையில், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில், ‘வின்ரோஸ் கம்போசிடிங்’ என்ற முறையில் பாக்டீரியாக்களை கொண்டு மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த இயற்கை உரத்தை ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்து, விவசாயத்துக்கு உகந்தது என்று சான்றிதழ் வழங்கி உள்ளது. இதில், நைட்ரஜன், பொட்டாஷ், பாஸ்பரஸ் சத்து அடங்கி உள்ளது. முதல் முறையாக 50 டன் உரம் சவுக்கு பயிருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த உரத்தை பயன்படுத்தலாமா? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் இருக்கிறது. அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்கள், வீட்டு தோட்டம், மாடித் தோட்டம், காய்கறிகள் என அனைத்து விதமான பயிர்களுக்கும் இந்த இயற்கை உரத்தைப் பயன்படுத்தலாம். நகரப்பகுதியில் உருவாகும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு, கிராமப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 டன் அளவுக்கு உரம் தயாராகிறது. ரசாயன உரங்களின் விலை அதிகமாக உள்ள நிலையில், குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை விவசாயிகள் பயன்படுத்தி பயனடையலாம். இந்த உரத்தினால் எந்தவித தீங்கும் நிகழாது” என்று தெரிவித்தார்.