மதுரை: மதுரை அருகே வண்ணத்துப் பூச்சிகள் அதிகம் காணப்படும் பழனியாண்டவர் அணைக்கரைப் பகுதியில் வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா அமைக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் குலசேகரன் கோட்டைக்கு அருகில் சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனியாண்டவர் அணை, அதனை ஒட்டிய பகுதிகளில் வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. இப்பகுதியில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை அமைப்பினர் பண்பாட்டுச் சூழல் நடை பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்தில் வண்ணத்துப் பூச்சிகளை ஆவணப்படுத்துவது முக்கியத்துவம் பெற்றதால், வழக்கத்துக்கு மாறாக சிறு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள், பட்டாம்பூச்சிகளைப் பார்த்து குதூகலத்துடன் அவற்றைப் பிடிக்க ஓடுவது அழகாக இருந்தது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே காவிரி ஆற்றின் கரையில் இதுபோல பட்டாம்பூச்சி அதிகம் உள்ள இடத்தில் வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை மாவட்டத்தில் பட்டாம்பூச்சிகள் அதிகம் காணப்படும் பழனியாண்டவர் அணைக்கரை பகுதி வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க உகந்த இடம் என்று மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் தமிழ்தாசன் கூறியதாவது: மிக அழகிய நிறங்களில் இறக்கை உள்ள வண்ணத்துப்பூச்சிகள் என்றாலே குழந்தைகளுக்கு தனி ஈர்ப்பு உண்டு.
கடந்த காலங்களில், இயல்பாகவே வீடுகளின் அருகே வண்ணத்துப் பூச்சிகள் நிறைந்து காணப்படும். ஆனால் காடுகள், மரங்கள், தோட்டங்கள் அழிக்கப்பட்டு சாலைகளும், கட்டிடங்களும் அமைக்கப்பட்டதும், வாழ்க்கை முறை மாற்றமும் வண்ணத்துப் பூச்சிகள், அந்நிய பூச்சிகளாக மாறிப் போனதற்கு முக்கிய காரணம். சூழலியல் பாதுகாப்பிலும், உணவுச்சங்கிலியை உறுதிப்படுத்துவதிலும் வண்ணத்துப் பூச்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இன்றைய சூழலில், பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை கவலைக்குரிய வகையில் குறைவாக உள்ளது. தொடர்ந்து குறைந்து வருகிறது என்று பிரிட்டன் சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர். பட்டாம் பூச்சி, தேனீ, குளவி போன்ற மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்கள் குறைந்து வருவது உணவு உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
பிரிட்டன் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஃபாக்ஸ் கூறுகையில், பட்டாம் பூச்சிகள் செழித்து வளர்வதற்கான வாழ்விடங்கள் இல்லாவிட்டால் இன்னும் அதிகமான வகை பட்டாம்பூச்சிகள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது என்கிறார். பட்டாம் பூச்சி விளைவு (பட்டர்பிளை எஃபெக்ட்) என்ற மாபெரும் சித்தாந்தமே உள்ளது என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள்.
மதுரையில், காடுகள் மட்டுமில்லாது நகர் பகுதிகளிலும் வண்ணத்துப் பூச்சிகள் பரவலாகக் காணப்படுகின்றன. குறிப்பாக பழனியாண்டவர் அணை பகுதியில் 41 வகை பறவையினங்களும், 25 வகை வண்ணத்துப்பூச்சி இனங்களும் ஆவணம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், பழனியாண்டவர் அணையின் நீர்பிடிப்புப் பகுதி சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்தும், மணல் மேவி தூர்ந்தும் கிடக்கிறது. இதனை உரிய முறையில் பராமரித்து வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைத்தால் மதுரை மாவட்டத்தில் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக அமையக் கூடும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுப்பணித் துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்.
இந்தப் பகுதி அருகே ச.பெருமாள்பட்டியில் உள்ள துருசுமலைப் பாறையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலோடு தொடர்புடைய இயற் கையான மலைப் பாறைகளும் உசில் மரக்காடும் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட தாவர இனங்களும், 25-க்கும் மேற்பட்ட பறவையினங்களும், 10-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சியினங்களும் துருசு மலையில் ஆவணம் செய்யப்பட்டது.
துருசுமலை அய்யனார் கோயில் காடு பல்லுயிர் மரபுத் தலமாக அறிவிக்க தேர்வு செய்ய தகுந்த இடம் என்பதை தமிழ்நாடு உயிரி பல் வகைமை வாரியத்துக்கு (TNBB) பரிந்துரை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்