கோவை: கோவை மதுக்கரை வனச்சரகத்தில் ரயில் மோதி யானை உயிரிழப்பதைத் தடுக்கும் செயற்கை நுண்ணறிவு அமைப்பில் (ஏஐ) டிஜிட்டல் எச்சரிக்கை பலகை ரயில் ஓட்டுநர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது.
கோவை வனக்கோட்டம் சுமார் 693.48 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. மாவட்டத்தில் மனித-யானை மோதல் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்த மோதலுக்கு, வனத்தையொட்டி அதிகரித்துவரும் குடியிருப்புப் பகுதிகள், நிலப்பயன்பாட்டு முறை, விவசாய நடைமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.
யானைகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க சூரிய மின்வேலி, அகழி ஆகியவற்றை அமைத்து அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனாலும், யானைகள் 2021 முதல் 2023 வரையிலான 3 ஆண்டுகளில் 9,028 முறை வெளியேறியுள்ளன. குறிப்பாக, மதுக்கரை வனச்சரக பகுதியில் உணவு தேடி வரும் யானைகள் தண்டவாளத்தைக் கடக்கும் முயற்சியில் ரயில் மோதி உயிரிழந்து வருகின்றன. கடந்த 2008 முதல் இதுவரை 11 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக் கின்றனர்.
இந்நிலையில், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் நிறுவப்பட்டது.
இந்தப் புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு ரயில் தண்டவாளப் பகுதியில் 12 கண்காணிப்புக் கோபுரங்கள் மூலம் உயர் ரக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பகல், இரவு நேரங்களில் தெர்மல் இமேஜ் கேமரா வீடியோ பதிவுகள் மூலம் தண்டவாள பகுதியில் யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
அதாவது 150 மீட்டரில் ஆரஞ்சு, 100 மீட்டரில் மஞ்சள், 50 மீட்டரில் சிவப்பு நிற எச்சரிக்கை சிக்னல்கள் உயர்ரக கேமராக்கள் மூலம் நிகழ்நேரத்தில் பெறப்படுகின்றன. ஏஐ கண்காணிப்பு அறையில் இருந்து வனத்துறை மற்றும் ரயில்வே துறையினருக்கு யானைகள் நடமாட்டம் இருப்பது குறித்து தகவல் தெரிவிக்கப் படுகிறது.
இதன் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு ரயில் மெதுவாக இயக்கிச் செல்லப்படுகிறது. இதனால் ரயில் மோதி யானை உயிரிழப்புகள் தடுக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட ஏ மற்றும் பி லைன் வழித்தடத்தில் செல்லும் ரயில் ஓட்டுநர்கள் யானைகள் நடமாட்டம் குறித்து தெரிந்து கொள்ள டிஜிட்டல் எச்சரிக்கை பலகை நிறுவப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை பலகையில் யானைகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து எச்சரிக்கை தருகிறது. இதன் மூலம் ரயில் ஓட்டுநர்கள் முன்னெச்சரிக்கையாக செயல் பட்டு ரயிலை மெதுவாக இயக்கி விபத்தை தடுக்க முடிகிறது.
500 முறை தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள்
வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ரயில் தண்டவாளத்தை கடக்கும் யானைகளை கண்டறிவதில் முன்பு சிக்கல் இருந்தது. இப்போது ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்கும் ஏஐ அமைப்பு நிறுவப்பட்ட பிறகு கண்காணிப்பு எளிதாகி உள்ளது. யானை நடமாட்ட தகவலை வாளையாறு மற்றும் எட்டிமடை ரயில் நிலைய மேலாளர்களுக்கு தெரிவித்துவிடுவோம்.
அவர் ரயில் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிப்பார். வனத்துறை, ரயில்வே துறையினருக்கு தனியாக உள்ள வாட்ஸ் அப் குழுவிலும் யானை நடமாட்டம் தகவலை பகிர்ந்துவிடுவோம். யானை நடமாட்டம் இருக்கும்பட்சத்தில் மெதுவாக ரயில் இயக்கி செல்லப்படுகிறது.
மேலும் ஏ மற்றும் பி லைன் ஆகிய இரு வழித்தடங்களில் வனப்பகுதி தொடங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் தலா 2 டிஜிட்டல் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி முதல் இதுவரை 500-க்கும் மேற்பட்ட தடவை யானைகள் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது கண்டறியப்பட்டு வனப்பணியாளர்களால் விரட்டப்பட்டுள்ளன” என்றனர்.