சென்னை: ராமேசுவரம் தீவில் சூழல் சுற்றுலாரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.1 கோடியில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர்டாக்டர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை அறிவிப்புகளை துறையின் அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் வெளியிட்டார். அதில், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள சமூக அமைப்புகள் மூலம்ராமேசுவரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வன உயர்பயிற்சியக மரபியல் பிரிவில், பூர்வீக இன விதை பெட்டகம் ரூ.10 கோடியில் நிறுவப்படும். வனப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், காடுகளை மீட்டெடுப்பதில் புதிய பரிமாணங்களை கொண்டு வருவதற்கும், புதிய தமிழ்நாடு மாநில வனக் கொள்கை - 2024 வெளியிடப்படும்.
டாக்டர் ஏஜேடி ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.1 கோடியில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும். இது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக அமையும் 2-வது இரவு வான் பூங்காவாக இருக்கும்.
முதலைகள் பாதுகாப்பு மையம்: தமிழகத்தின் கடற்கரைக்கு ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி(சிற்றாமை) ஆமைகள் மற்றும்பச்சை ஆமைகள் வருகின்றன. இந்த ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுக்கு ரூ.1 கோடியில் ஆமை பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். தஞ்சாவூர் கோட்டம் கும்பகோணம் சரகம் அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மையம் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும்.
கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்கள் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும். தமிழகத்தின் வனப்பகுதிகளில் உள்ள 40 மலையேற்ற வழித்தடங்களை தமிழக அரசு கண்டறிந்துள்ளது. அந்த வழித்தடங்களுக்கான வரைபட புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும் என மொத்தம்10 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
யானைகளின் சுவாரசியங்கள்: இந்த அறிவிப்பு புத்தகத்தில் யானைகள் குறித்த 10 சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், ஆசிய யானைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகள் என 2 வகையான யானை இனங்கள் உள்ளன.
யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள். யானைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை. யானையின் துதிக்கை 40 ஆயிரம் தசைகளால் ஆனது. யானைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதற்கு செலவு செய்கின்றன. கரி, பிடி, கைம்மா, களிறு, வேழம், வாரணம் என்பன யானையின் சில பெயர்கள். யானையின் பல்லின் நீட்சியே தந்தமாகும்.
யானைக் கூட்டத்தை வயதானஅனுபவம் மிகுந்த பெண் யானையே வழி நடத்தும். யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவுஉட்கொள்கின்றன. யானைகளின் ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.