சுற்றுச்சூழல்

கொல்லிமலையில் இரவு வான் பூங்கா முதல் வனக் கொள்கை 2024 வரை - தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்

செய்திப்பிரிவு

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும். என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அமைச்சர்களான சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட 15 முக்கிய அறிவிப்புகள்:

> 14 கடலோர மாவட்டங்களில் கடற்கரை மாசுக் கண்காணிப்பு நிலையங்கள், நீலப் படைகள், மீன் வலை சேகரிப்பு மையங்கள், குறிப்பிட்ட நதி முகத்துவார பகுதிகளில் மிதக்கும் குப்பைத் தடுப்பாண்கள் போன்ற மாசுக்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.100 கோடி செலவில், கடற்கரை மாசினை குறைக்கும் (TN-SHORE) திட்டம் செயல்படுத்தப்படும்.

> சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒலி மாசினை சென்ஸார் மூலம் அளவிடும் ஒலி மாசு வரைபட ஆய்வுப் பணிகள் ரூ. 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

> ரூ. 4 கோடி செலவில் குப்பைக் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணிக்கப்படும். வெப்ப புகைப்படக் கருவி (Camera),வாயு கண்டறியும் சென்ஸார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கட்டுப்பாட்டு மென்பொருள் போன்ற மேம்பட்ட தொழில்நுடப்ங்கள் பயன்படுத்தப்படும். நிகழ்நேர தரவுகள் அடிப்படையில் எச்சரிக்கைகளை வழங்குவதன் மூலம், அபாயங்களை குறைக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் முடியும். ஆரம்பக் கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள பெருங்குடி மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சியில் உள்ள திருக்கட்டளை ஆகிய இடங்களில் உள்ள திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் இந்த கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்படும்.

> காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வும் தமிழக முதல்வரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதற்கும் (Green School Program) மேலும் 100 பள்ளிகளுக்கு இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்.

> ரூ.3 கோடி செலவில் தமிழ்நாடு புதுமைத் தொழில் முனைவோர் திட்டம் தொடங்கப்படும். காலநிலை மாற்றத்துக்கு புதுமையான தீர்வுகள் அளிக்கும் 5 சிறந்த குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஆதார நிதி வழங்கப்படும். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இயக்கத்தோடு ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

> தமிழகத்தின் வனப்பகுதிகளில் உள்ள 40 மலையேற்ற வழித்தடங்களுக்கான வரைபட புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்கள் (Orchidariums) ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தேவைக்காகவும், உள்ளூர் சமூகத்தை ஆர்க்கிட் பாதுகாப்பை நோக்கி ஈர்ப்பதற்காகவும் பயன்படுத்தப்படும்.

> சதுப்பு முதலைகள் இனம் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சி, மனித-முதலை மோதல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு, முதலை இனங்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள தஞ்சாவூர் கோட்டம், கும்பகோணம் சரகம், அணைக்கரையில் ரூ. 2.50 கோடியில் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

> ஆண்டுதோறும் தமிழகத்தின் கடற்கரைக்கு வருகின்ற ஆலிவ் ரிட்லி (சிற்றாமை) ஆமைகள் மற்றும் பச்சை ஆமைகள் கூடு கட்டும் பகுதிகளை பாதுகாப்பதற்கும், ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பவும், உள்ளூர் மீனவ தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை உள்ளடக்கிய ஆமை பாதுகாவலர் குழு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இரவு வான் பூங்கா (Dark Sky Park) அமைக்கப்படும். ஒளி மாசுபாட்டின் உலகளாவிய அச்சுறுத்தலில் இருந்து விலைமதிப்பற்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்க உதவும். இரவுநேர விலங்குகளுக்கு இணக்கமான ஒரு பூங்காவாக இது இருக்கும். மின்சார விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்து இரவு வானத்தில் நட்சத்திரங்களைப் பார்ப்பதை இது அதிகரிக்கும்.

> வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய வன உயிரின ஆர்வலர் ஒருவருக்கு, ‘டாக்டர் ஏஜேடி ஜான்சிங் வன உயிரின பாதுகாப்பு விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். ஒரு பாராட்டுப் பத்திரம் மற்றும் 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை உள்ளடக்கியதாக இந்த விருது இருக்கும்.

> வனப் பாதுகாப்புச் சட்டம் 1980, வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972, ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய திருத்தங்கள், வனப் பாதுகாப்பு, பல்லுயிர் மறுசீரமைப்பு, நிலையான வன மேலாண்மை, சமூகப் பங்கேற்பு மற்றும் வாழ்வாதார ஆதரவு, காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் தழுவல் போன்ற புதிய பரிணாமங்களை கொண்டு வருவதற்கும் தமிழ்நாடு மாநில வனக் கொள்கை 2024 (TamilNadu State Forest Policy 2024) வெளியிடப்படும்.

> தமிழ்நாடு மரங்கள் (அரசு நிலங்கள்) பாதுகாப்பு சட்டம், 2024 அறிவிக்கை: சூழலியல், வனப்பரப்பு மற்றும் மரப்பரப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் இச்சட்டம் முன்மொழியப்படுகிறது. நாட்டின் புவியியல் பரப்பில் 33% வனம் அல்லது பசுமைப்போர்வை என்ற தேசிய இலக்கை அடைய இந்த அரசு உறுதியாக உள்ளது. அரசுக்குச் சொந்தமான நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான விரிவான விதிமுறைகளை வகுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்க இது உதவும்.

> ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூர்வீக இன விதை பெட்டகம் அமைக்கப்படும். ஜெர்ம்ப்ளாசம் சேகரிப்பு, சேமிப்பு, இனப்பெருக்கம், விதை மற்றும் நாற்றுக்களை கையாளுதல், விதை சோதனை, குளோன் வங்கிகள், அதன் வாழ்விடம் மற்றும் வெளியிடத்தில் பாதுகாப்பு மற்றும் வன மரபியல் வளங்களின் நிலையான மேலாண்மை ஆகியவற்றுக்கான மையமாக செயல்படும். விதை நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காகவும், ஆண்டு முழுவதும் நடவு செய்வதற்கான விதைகளை வழங்கவும் கிரயோஜெனிக் வசதியுடன் நிறுவப்படும்.

> மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளையில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் (Community Based Organization) மூலம் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்

SCROLL FOR NEXT