பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் இரவு, பகலாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது உணவு தேடி, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. கடந்த சில நாட்களாக 3 குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட யானைகள் பழநி அடுத்துள்ள ஆயக்குடி, சட்டப்பாறை பகுதியில் முகாமிட்டுள்ளன. அவை இரவு நேரங்களில் தோட்டங்கள், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதையடுத்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பழநி வட்டாட்சியர் சக்திவேலன் தலைமையில் யானைகளை விரட்டுவது தொடர்பாக வனத்துறையினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜூன் 12) யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடைபெற இருப்பதால் விவசாயிகள் தோட்டங்ளுக்கு செல்ல வேண்டாம் என ஒட்டன்சத்திரம் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன் பின்னர், இன்று (ஜூன் 13)காலை முதல் பழநி அடுத்த சட்டப்பாறையில் 20 பேர் அடங்கிய வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, யானைகள் 2 கூட்டமாக பிரிந்ததால் வனத்துறையினரும் 2 குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, விவசாயிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். தோட்டங்களில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.