மதுரை: பல்லுயிர் பெருக்கம் உள்ள வண்டியூர் கண்மாயை, பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மதுரை மாநகர் பகுதியில் செல்லூர், வண்டியூர் கண்மாய்கள் முக்கிய நீர் ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இதில் வண்டியூர் கண்மாய் கடந்த காலத்தில் 687.36 ஏக்கர் பரப்பில் இருந்தபோது, 107.03 மில்லியன் கன அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. இதன் மூலம் 963 ஏக்கர் பாசன வசதி பெற்றன.
மாட்டுத்தாவணி அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையம், பூ மார்க்கெட் ஆக்கிரமிப்புகள் போக, தற்போது வண்டியூர் கண்மாய் 576.36 ஏக்கர் பரப்பளவு மட்டுமே எஞ்சியுள்ளது. இவை போக தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் வண்டியூர் கண்மாயை ஆக்கிரமித்துள்ளன. இப்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மேலும் ஆக்கிரமிக்கப்படுகிறது.
இந்த கண்மாயில் பல்வகைப் பறவையினங்கள், மீன் இனங்கள் வசிக்கின்றன. தற்போது ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளதால் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் இக்கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டுமென சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் தமிழ்தாசன் கூறியதாவது: சிறுமலையில் உற்பத்தியாகும் சாத்தியார் அணையின் கடைமடை பாசன கண்மாயாக வண்டியூர் கண்மாய் விளங்குகிறது. சாத்தியார் அணையின் கால்வாய் தான் இக்கண்மாயின் முதன்மை நீர்வரத்து கால்வாய் ஆகும். வைகை - பெரியார் பிரதான கால்வாய் நீரும், வண்டியூர் கண்மாயின் வரத்து கால்வாயாக உள்ளது.
வண்டியூர் கண்மாய்க்கு வரும் சாத்தியார் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் சாத்தியார் கால்வாயில் கலந்து வண்டியூர் கண்மாயில் விடப்படுகிறது.
பூ மார்க்கெட்டை ஒட்டிச் செல்லும் பெரியாறு பிரதான கால்வாயிலும், மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தை ஒட்டிச் செல்லும் சாத்தியார் கால்வாயிலும், மதுரை நகரின் கழிவு நீரும் வண்டியூர் கண்மாயில் கலக்கிறது.
வண்டியூர் கண்மாயைச் சுற்றியுள்ள மருத்துவமனை கழிவு நீரும் இக்கண்மாயிலேயே விடப்படுகிறது. இதனால் இக்கண்மாய் இன்று கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது.
கெண்டை, வெளிச்சி, கெளுத்தி உள்ளிட்ட நன்னீர் மீன்கள் பெருகிக் கிடந்த கண்மாயில் இப்போது சிலேபி, ரோகு, மிர்கால், தேளி, கொசு மீன் உள்ளிட்ட அயல் மீன்களே பெருகிக் கிடக்கின்றன.
கழிவுநீர் பெருக்கத்தாலும், வளர்ப்பு மீன்களின் பெருக்கத்தாலும் கண்மாயின் இயல்பான நீர்வாழ் உயிரினங்கள் அற்றுப் போய்விட்டன.
கடந்தாண்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை நிகழ்த்திய கணக்கெடுப்பில், 20 வகை நன்னீர் மீன் இனங்கள் ஆவணம் செய்யப்பட்டன. அதில் 11 வகை மீன் இனங்கள் அயல் மற்றும் வளர்ப்பு மீன் இனங்கள் ஆகும். இயல் மீன் இனங்களைவிட அயல் மீன் இனங்களே வண்டியூர் கண்மாயில் பரவலாக காணப்படுகின்றன.
வண்டியூர் கண்மாயில் இதுவரை 125 வகை பறவை இனங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. அதில் பூநாரை, கூழைக்கடா, நீலச்சிறகி, நெடுங்கால் உள்ளான், மீசை ஆலா, சங்குவளை நாரை உள்ளிட்ட 31 வகை இனங்கள் வலசை வருபவை.
வெண்கழுத்து நாரை, பாம்புத்தாரா, கூழைக்கடா, கருந்தலை அன்றில், பட்டைவால் மூக்கன் உள்ளிட்ட 5 இனங்கள் அழிவைச் சந்திக்கும் அச்சுறுத்தல் பட்டியலில் உள்ளவையாக ஆவணம் செய்யப்பட்டுள்ளன.
வண்டியூர் கண்மாய் பாசனத்துக்கும், நிலத்தடி நீர் பெருக்கத்துக்கு மட்டும் உரிய நீர்நிலை அல்ல. 125 வகை பறவை இனங்கள், குரவை, விரால், உழுவை, அயிரை, கெண்டை பொடி உள்ளிட்ட 20 வகை நன்னீர் மீன் இனங்கள், தண்ணீர் பாம்பு, பசும் நீர் பாம்பு, சாரை உள்ளிட்ட 15 வகையான பாம்பு இனங்கள், காட்டுப்பூனை, சாம்பல் நிற கீரி, இந்திய அணில், வெள்ளெலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பாலூட்டி வகை உயிரினங்களின் வாழிடமாக வண்டியூர் கண்மாய் விளங்குகிறது.
அதனால், இப்படி பல்லுயிரிய பெருக்கமுள்ள கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்று தமிழ்தாசன் வலியுறுத்தியுள்ளார்.