சேலம்: குடிநீர் குழாயில் இருந்து, குடிநீருக்குப் பதிலாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவது போன்று, பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட சுமார் 15 அடி உயர சிற்பம் ஏற்காடு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏற்காட்டில், கோடை விழா- மலர்க்காட்சி நேற்று (மே 22) தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள கோடை விழா, மலர்க்காட்சியைக் காண்பதற்காக, தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்கள், தொடர்ச்சியாக சென்று வருகின்றன.
மேலும், சுற்றுலாப் பயணிகள் பலர், இரு சக்கர வாகனங்களிலும் ஏற்காடு சென்று வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் குழாயில் இருந்து, குடிநீருக்குப் பதிலாக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவது போன்று, ஏற்காடு மலைப்பாதையின் அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 15 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமான சிற்பத்தை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இந்த சிற்பம், ஏற்காடு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து சேர்வராயன் தெற்கு வனச்சரக வனவர் சுரேஷ் கூறுகையில், ‘சேலம் மாவட்ட வன அலுவலர், ஷஷாங்க் காஷ்யப் ரவி உத்தரவின்பேரில், சேலம் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, ஏற்காடு கோடை விழா தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்னதாக, ஏற்காடு அடிவாரத்தில் இருந்து, ஏற்காடு மலைப்பாதை நெடுகிலும் சாலையில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தோம். 2 நாட்களில் சுமார் 250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
பிளாஸ்டிக் கழிவுகள் எளிதில் மக்கிப் போகாமல், நிலத்தை மாசுபடுத்துவதுடன், அதன் நுண்ணிய துகள்கள் நீரிலும் கலந்துவிடுகிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்காடு மலைப்பாதை, வனத்தை ஒட்டி இருப்பதால், இங்கு வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் வன விலங்குகளுக்கும் ஆபத்தாக மாறி வருகிறது. எனவே, ஏற்காடு மலைப்பாதை நெடுகிலும் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு, கோடை விழாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட வனத்துறை சார்பில் ஏற்காடு அடிவாரத்தில், பிளாஸ்டிக் கழிவுகளால் சிற்பம் அமைத்துள்ளோம்’ என்றார்.
இதனிடையே, சுற்றுலாப் பயணிகள், பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன சிற்பத்தை பார்த்ததும் ஒரு கணம் நின்று, கவனித்து செல்வதுடன், பலர் அதனை போட்டோ எடுத்தும் செல்கின்றனர். பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்காவிட்டால், எதிர்காலத்தில் பிளாஸ்டிக் கலந்த குடிநீர் தான் நமக்கு கிடைக்கும் என்பது, இந்த சிற்பத்தை காணும் அனைவரின் கண்ணிலும் நிழலாடுவதை காண முடிகிறது.