திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் 
சுற்றுச்சூழல்

திருப்பூர் - நஞ்சராயன் குளத்தில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்: அதிகாரிகள் ஆய்வு

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: கடந்த சில நாட்களாக திருப்பூரில் கனமழை பெய்து வரும் நிலையில், நஞ்சுராயன் குளத்தில் இன்று (மே 21) பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். விவசாயத்துக்காக 1948-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போதும் குளத்தைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகளுக்கு பயன்பட்டு வருகிறது.

வருடம்தோறும் கால சூழலுக்கு ஏற்றவாறு நஞ்சராயன் குளத்தில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரிக்கும். தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு நஞ்சராயன் குளத்தை 17- வது பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. இந்நிலையில் நஞ்சராயன் குளத்தில் இன்று (மே 21) காலை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

திருப்பூரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, இங்குள்ள சாய ஆலைகள், சாயக் கழிவு நீரை திறந்துவிட்டதுதான், மீன்கள் செத்து மிதக்க காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மீன்கள் செத்து மிதப்பதினால் குளத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மீன்களை உடனடியாக அப்புறப்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி கூறியதாவது: ‘தொடர் மழையின் காரணமாக அனைத்து பகுதிகளிலும் இருக்கும் இயற்கை வளங்கள் அடித்துக் வரப்பட்டு குளத்தில் சேருகிறது. இதனால் குளத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து போகும் முதலில் சிறிய வகை மீன்கள் உயிரிழக்கும், பின்னர் பெரிய அளவுள்ள மீன்களும் உயிரிழக்க நேரிடும். மேலும் இதுகுறித்து கூடுதல் ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கப்படும்’ என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT