உடுமலை: உடுமலை சுற்றுவட்டாரத்தில் நிலவி வரும் கடும் வறட்சியை தாங்க முடியாமல் தென்னை மரங்கள் கருகியுள்ளன. இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிஏபி பாசனம், கிணற்றுப் பாசனம், ஆழ்குழாய் உள்ளிட்ட நீராதாரங்களைக் கொண்டு தென்னை உள்ளிட்ட இதர பயிர் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால், பல பகுதிகளில்நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. ஆயிரம் அடிக்கும் மேலாக ஆழ்குழாய் அமைத்தும்தண்ணீரில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அணைகளில் நீர்மட்டம் சரிந்துவிட்டதால் பாசனத்துக்கு தேவையான நீரை திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். நீராதாரங்கள் வற்றியதால், பல இடங்களில் தென்னையைப் பாதுகாக்க லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயிகள் ஊற்றி வருகின்றனர். தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்ற முடியாத விவசாயிகள், வேறு வழியின்றிதென்னை மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தேங்காய் விலை வீழ்ச்சி, கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காதது, வெளிநாடுகளில் இருந்து தென்னை சார் பொருட்கள்இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால், தென்னை சார் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
இதற்கிடையே, உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீரின்றி தென்னை மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. கருகிய மரங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன்னர் நீர்சேமிப்புத் திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என்றனர்.