கோவை: தென்மேற்கு பருவ கால மழைப் பொழிவு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக பயிர் அறுவடை செய்யலாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடை மழை பொழிவு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிக குறைவாக உள்ளது. இன்று (மே 8) முதல் மூன்று நாட்களுக்கு நல்ல மழை பொழிவை எதிர்பார்க்கலாம். கோடை வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால், வரப்போகும் தென் மேற்கு பருவ கால மழைப் பொழிவு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக பயிர் அறுவடை செய்யலாம்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைக்கான கருவிகள் ஆகியவற்றில் ஏஐ தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், பழங்கள் மற்றும் காய்கறி அறுவடையிலும் ரோபோடிக்ஸ் கருவிகள் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சியில் இளநீர் தட்டுப்பாட்டுக்கு வறட்சி, வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் கேரள வாடல் நோய் ஆகிய காரணங்கள் உள்ளன. நீர் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, என்றார்.