சுற்றுச்சூழல்

அயல்நாட்டு உயிரினங்கள் வளர்ப்போர் புதிய இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்: வனத்துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அயல்நாட்டு உயிரினங்களை வளர்ப்போர் அது தொடர்பான விவரங்களை புதிய இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என வனத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழல், வனஅமைச்சகம், வன உயிரின (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ், உயிருள்ள விலங்கு இனங்கள் (அறிக்கையிடல் மற்றும் பதிவு செய்தல்) விதிகள், 2024-ன் படி பரிவேஷ் 2.0 (PARIVESH 2.0) இணைய பக்கம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதனால் ஏற்கெனவே பரிவேஷ் 1.0 இணைய பக்கத்தில் உயிருள்ள விலங்கு இனங்கள் தன்னார்வ பதிவு, பிறப்பு, இறப்பு மற்றும் வேறு நபர்களுக்கு மாற்றம்செய்தல் தொடர்பாக பெறப்பட்டவிண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

தற்போது அயல்நாட்டு உயிரினங்களை வைத்திருக்கும் மற்றும்இனிவரும் காலங்களில் இத்தகைய உயிரினங்களை பெறும் அனைவரும் உயிருள்ள விலங்கு இனங்கள் (அறிக்கையிடல் மற்றும்பதிவு செய்தல்) விதிகள், 2024-ன் படி பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச்சான்று பெறுவது கட்டாயமாகும்.

அயல்நாட்டு உயிரினங்களை வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் இந்த விதிகள் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, 6 மாதத்துக்குள்ளும், அதன் பிறகு அத்தகைய உயிரினங்களை பெறும் நாளிலிருந்து 30 நாளுக்குள்ளும் பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவுசெய்ய விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம். ரூ.1000.

அயல்நாட்டு உயிரினங்களின் இறப்பை, கால்நடை மருத்துவர் வழங்கிய உடல் கூராய்வு அறிக்கையுடன் தாக்கல் செய்ய வேண்டும். அயல்நாட்டு உயிரினங்களை மற்றொருவருக்கு மாற்றும் பட்சத்தில் 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வினங்களை எந்தவொரு உள்நாட்டு இனங்களுடன் இனக் கலப்பு செய்ய அனுமதி இல்லை.

SCROLL FOR NEXT