ஓசூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு விற்பனைக்காக டிரக்டரில் கொண்டு வரப்பட்ட தண்ணீர். 
சுற்றுச்சூழல்

ஓசூரில் நிலவும் வறட்சியால் ஒரு டிராக்டர் தண்ணீரின் விலை ரூ.1,200 ஆக உயர்வு

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூரில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியத் தேவைக்கான தண்ணீர் ஒரு டிராக்டர் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், திடீரென ரூ.1,200-ஆக விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஓசூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக நீர் ஆதாரங்களில் நீர்மட்டம் சரிந்து, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது. மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளிலும் நீரின்றி வறண்டுள்ளது. இதனால் , மாநகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திடீர் விலை உயர்வால் அதிர்ச்சி: இந்நிலையில், தனியார் டிராக்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தண்ணீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கி தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நிரப்பி அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.

குடிநீருக்கு கேன் வாட்டரை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, கடந்த நாட்களில் ஒரு டிராக்டர் தண்ணீர் ( 5 ஆயிரம் லிட்டர் ) ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,000 முதல் ரூ.1,200-வரை விற்பனை செய்யப்படுகிறது. இத்திடீர் விலை உயர்வு பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டிராக்டர் தண்ணீர் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

கிராமங்களுக்கு செல்லும் நிலை - இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: ஓசூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப் பாட்டை பயன்படுத்தி டிராக்டர் தண்ணீரின் விலையை 100 சதவீதம் உயர்த்தியுள்ளனர். இதனால், நடுத்தர மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையால், மாநகராட்சி பகுதியில் வாடகை வீடுகள் வசிக்கும் தொழிலாளர்கள் பலர் கிராமப் பகுதிகளில் குடியேறத் தொடக்கியுள்ளனர்.

இதனிடையே, தண்ணீர் தேவையைப் பயன்படுத்தி தனியார் சிலர் செங்கல் சூளை மற்றும் பேவர் பிளாக்ஸ் தயாரிப்பாளர்கள் தங்களின் சொந்த தேவைக்கு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீர் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

கேள்விக்குறியாகும் நீரின் தரம்: மேலும், விலைக்கு விற்பனை செய்யப்படும் கேன் குடிநீரின் தரம் கேள்விக் குறியாகியுள்ளது. இதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், டிராக்டர் தண்ணீர் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தண்ணீர் விற்பனையை முறைப் படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT