பழநி அருகே ராஜாபுரம் பகுதியில் குடிநீர் பிடிப்பதற்காக குடங்களுடன் காத்திருந்த கிராமத்தினர். 
சுற்றுச்சூழல்

பழநியை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு

செய்திப்பிரிவு

பழநி: பழநி பகுதியில் கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்ன தாகவே தொடங்கியுள்ள நிலையில், மக்களுக்கு குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. கோடை வெயிலால் உள்ளூர் நீராதாரங்கள் வறண்டு வரும் நிலையில், போதுமான குடிநீர் கிடைக்காததால் பழநியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது. பழநியை அடுத்துள்ள அ.கலையம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபுரம், பெரியம்மா பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அருவங்காடு பகுதிக்கு, பாலாறு அணையை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. 3 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிப்பதால், குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விலைக்கு வாங்க முடியாதவர்கள் உவர்ப்பு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தினமும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து ராஜாபுரம் கிராமத்தினர் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 100-க்கும்மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தெருவுக்கு தெரு குடிநீர் குழாய்கள் இருந்தாலும், ஒரு சில குழாயில் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வழங்கப் படுகிறது. குடிநீர் விநியோகிக்கும் நாளில் பணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அனைவரும் கூலி தொழிலாளர்கள் என்பதால், தண்ணீரை விலைக்கு வாங்கவும் வழி இல்லை என்று கூறினர்.

SCROLL FOR NEXT