வறண்ட நிலையில் உள்ள வீராணம் ஏரி. 
சுற்றுச்சூழல்

நீரில்லாமல் மண்மேடாக மாறியுள்ள வீராணம் ஏரியை தூர்வார வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கடலூர்: வீராணம் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடலூர் மாட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி. இந்த ஏரி சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியின் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஏரியின் மொத்த சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் மொத்த அகலம் 5.6 கி.மீ. ஏரியின் பரப்பளவு 15 சதுர மைலாக உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடியாகும். ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் ( 1.465 டி.எம்.சி ) கன அடியாகும்.

ஏரியின் கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். பலரின் வாழ்வாதாரத்துக்கு வித்திட்ட இந்த ஏரி, தூர்ந்து போய் மண்மேடாக காணப்படுகிறது. தற்போது ஏரி முழுவதும் வறண்டு தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதை பயன்படுத்தி ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இது தொடர்பாக ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாயகி கூறுகையில், “தற்போது ஏரி வறண்டுள்ளது. இந்த நேரத்தில் ஏரியை முழுமையாக தூர்வார வேண்டும். பாசன வாய்க்கால்களின் ஷெட்டர்களை சீரமைக்க வேண்டும். ஏரியை முழுமையாக தூர்வாருவதால் தண்ணீரை அதிகமாக தேக்கும் நிலை ஏற்படும். ஏரியில் எப்போதும் தண்ணீர் இருக்கும் நிலை இருக்கும். இதனால் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் ஏரியின் வண்டல் மண்ணை விவசாயிகள் விளை நிலத்துக்கு எடுத்துச் செல்ல அரசு ஆணையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் ஏரியில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT