பளுவூர் ஒத்தவீடு பகுதியில் ஊருக்கு வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய். 
சுற்றுச்சூழல்

பல மாதங்களாக குடிநீரின்றி கிராமத்தினர் தவிப்பு @ சிவகங்கை

செய்திப்பிரிவு

சிவகங்கை: காளையார்கோவில் அருகே குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே இலந்தை குளம் ஊராட்சி பளூவூர் ஒத்த வீடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்துக்கு பளுவூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பளுவூரில் இருந்து தோடுகுளம் விலக்கு வரை புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது, பளூவூர் ஒத்தவீடு பகுதிக்குச் செல்லும் குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் 4 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லை. இந்நிலையில், கிராம மக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.12-க்கு வாங்கி பயன் படுத்தி வருகின்றனர். மேலும், கோடைகாலம் என்பதால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியினர் கூறியது: சாலைப் பணி தொடங்கியதில் இருந்தே குடிநீர் விநியோகம் இல்லை. பல ஆயிரம் ரூபாய் செலவாகும் எனக் கூறி உடைந்த குழாயை மாற்ற மறுக்கின்றனர். குழாய் உடைந்த இடத்தில் தற்காலிகமாக தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஆனால், ஒரு கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். குறைவான தண்ணீரே வருகிறது. எனவே, சேதமடைந்த குழாய்களை சரி செய்து தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலைப் பணியின் போது ஒரு கி.மீ. தூரத்துக்கு குழாய்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால், அதை சரி செய்து கொடுக்காமலேயே சென்று விட்டனர். தற்காலிகமாக குடிநீர் குழாய் அமைத்து தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதில் காலை, மாலை தலா ஒரு மணி நேரம் தண்ணீர் விடுகிறோம். ஒரு வாரத்துக்குள் சேதமடைந்த குழாயை மாற்றிவிடுவோம் என்றார்.

SCROLL FOR NEXT