பொள்ளாச்சி: ஆனைமலையின் அடையாளமாக உள்ள சாலையோர மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியதால்,நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் சாலையில் இருபுறமும் புளியன், புங்கன், நாவல், வேப்பமரம் உள்ளிட்ட பலவகையான மரங்கள் உள்ளன. அம்பராம்பாளையம் முதல் சேத்துமடை வரை சாலையின் இருபுறமும் நூற்றாண்டு பழமை வாய்ந்தஆயிரக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. இவை சாலையை போர்த்தியபடி பசுமைப்பந்தல்போல் காட்சியளிப்பதால், பலரும் இங்கு வந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இம்மரங்கள், ஆனைமலையின் அடையாளமாக உள்ளது என்றால் மிகையல்ல.
இந்த சாலையில் விபத்து ஏற்படுவதாகக் கூறி, சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர். சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1.94 கோடி மதிப்பில் சாலையின் ஒருபுறம் 5 மீட்டர் தொலைவுக்கு விரிவாக்கம் செய்து சென்டர் மீடியன் அமைக்க கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இதனால் ஆனைமலையில் சாலையோர மரங்களை வெட்ட டெண்டர் விட, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக மக்களிடையே தகவல் பரவியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆனைமலையை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், முக்கோணம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் ஆனைமலை காவல் ஆய்வாளர் குமார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் மரம் வெட்டுவதற்கு டெண்டர் விடுவதை தற்காலிகமாக கைவிடுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்தன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில்பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடப்படவில்லை. இதனால் பொள்ளாச்சி பகுதியில் பருவமழை தவறிவிட்டது.
வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. தற்போது ஆனைமலை சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது. சாலையை 5 மீட்டருக்கு பதிலாக 2 மீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்தால், மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை வராது. சாலை யோரம் உள்ள மரங்களை வெட்டாதவாறு சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திமுக எதிர்ப்பு: இது குறித்து திமுக சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, ‘ஆனைமலை - டாப்சிலிப் சாலையை அலங்கரிக்கும் மரங்கள் அப்படியே இருக்க வேண்டும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சாலை, ஒரு வழிப்பாதை மட்டுமல்ல, இது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியத்துக்கு வாழும் சான்றாகும். ஆனைமலை - டாப்சிலிப் சாலை நமது சுற்றுச்சூழல் பாரம்பரியத்தின் அடையாளமாக நிற்கிறது. அதை பாதுகாப்பது நமது கடமையாகும்’ என தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை முன்மொழிவை நிராகரித்த சார் ஆட்சியர்: ஆனைமலை சாலையில் 27 மரங்களை வெட்டுவதற்கான நெடுஞ்சாலைத் துறையினரின் முன்மொழிவை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுப்பேகவுண்டன்புதூர் கிராமத்தில் அம்பராம்பாளையம் முதல் சேத்துமடை வரை உள்ள சாலையில் தாத்தூர் பிரிவு அருகே நெடுஞ்சாலைத் துறையினரால் சந்திப்பு மேம்பாட்டுப் பணி மேற்கொள்ள உத்தேசிக்கப் பட்டது. இப்பணிக்கு 27 மரங்கள் இடையூறாக இருப்பதாகவும், அவற்றை வெட்ட அனுமதிக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய் துறையினருக்கு முன்மொழிவு அனுப்பினர்.
இதையடுத்து வருவாய் துறையினர் புலத்தணிக்கை மேற்கொண்டனர். அதில், அம்பராம்பாளையம் முதல் சேத்துமடை வரை உள்ள சாலை, தற்போது வாகனப் போக்குவரத்துக்கு போதுமானது என தெரிய வந்துள்ளது. மேற்கண்ட பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பட்சத்தில், மழைப் பொழிவின்மை, மண் அரிப்பு மற்றும் இயற்கை அழகு சீர்கெடும். எனவே, மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத் துறை கோரிய அனுமதி முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளது, என கூறப்பட்டுள்ளது.