முதுமலை - பந்திப்பூர் சாலையில் பாசப் போராட்டம் நடத்திய யானை. 
சுற்றுச்சூழல்

முதுமலை - பந்திப்பூர் சாலையில் புலி தாக்கியதில் உயிரிழந்த குட்டி யானை: தாய் யானை பாசப் போராட்டம்

செய்திப்பிரிவு

முதுமலை: முதுமலை அருகே புலி தாக்கியதில் உயிரிழந்த யானைக் குட்டியை பிரிய மறுத்து, தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்கச் செய்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூரு செல்லக் கூடிய சாலையில், முதுமலை மற்றும் மைசூரு பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதிகள் உள்ளன. இந்நிலையில், முதுமலை- பந்திப்பூர் சாலையில் படுகாயங்களுடன் குட்டி யானை இறந்து கிடந்தது. அதனருகிலேயே தாய் யானையும் நின்று கொண்டிருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள், வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்றனர்.

அவர்களை, குட்டியின் அருகில் செல்லவிடாமல் தாய் யானை ஆக்ரோஷமாக விரட்டியது. இறந்து கிடந்த குட்டியை விட்டுச்செல்ல மனமில்லாமல், தாய் யானை அதே இடத்திலேயே பாசப் போராட்டம் நடத்தியது. இதனால், நீலகிரி- மைசூரு சாலையில் இருபுறமும் சென்ற வாகனங்களும் சோதனைச் சாவடியிலேயே நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே அந்த சாலையில் வந்த கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை, தாய் யானை விரட்டி தாக்க முயற்சித்தது.

இதையடுத்து பல மணி நேர போராட்டத்துக்குப் பின் அந்த யானையை வனப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். பின்பு கிரேன் உதவியுடன் குட்டி யானையின் சடலத்தை அப்புறப்படுத்தினர். புலி தாக்கியதில் குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். 3 மணி நேரத்துக்குப் பின் முதுமலை- பந்திப்பூர் சாலையில் போக்கு வரத்து சீரானது. உயிரிழந்த குட்டி யானையின் சடலத்தின் அருகே தாய் யானை நடத்திய பாசப்போராட்டம் காண்போரை கண் கலங்கச் செய்தது.

SCROLL FOR NEXT