மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை கண்டுபிடிக்க நேற்று வனத் துறையினர் குத்தாலம் அருகேயுள்ள காஞ்சிவாய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் ஏப்.2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர். ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து வந்துள்ள வனக்காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதையும் கண்காணித்து சிறுத்தையை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், தெர்மல் ட்ரோன் கேமரா மூலமும், மோப்ப நாய்கள், வேட்டை நாய்கள் உதவியுடனும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. செம்மங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் ஏப்.3-ம் தேதி இரவு சிறுத்தை நடமாடுவது பதிவாகியிருந்த நிலையில், மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவது சிறுத்தைதான் என்பது வனத் துறையினரால் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், செம்மங்குளம் பகுதியிலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள குத்தாலம் அருகேயுள்ள காஞ்சிவாய் பகுதியில் ஏப்.6-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த தகவலின் பேரில், வனத் துறையினர் அப்பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நேற்று அப்பகுதியில் தேடுதல் மற்றும் சிறுத்தையை கண்டறிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இது குறித்து மாவட்ட வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோமல் மற்றும் காஞ்சிவாய் பகுதியில் நண்டலாற்றுப் பகுதியை ஒட்டிய, சிறுத்தை நடமாடக் கூடியமுக்கிய இடங்களில் 4 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஏற்கெனவே சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட காவிரி ஆற்றின் சிற்றோடைகளில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. முன்னதாக, சிறுத்தை நடமாட்டம் தென்பட்ட இடங்கள் மற்றும் சாத்தியக் கூறு உள்ள பகுதிகளில் 19 கேமரா டிராப்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவிரி ரயில்வே மேம்பாலத்தின் கீழே ஒரு கூண்டும், மஞ்சளாறு ஆற்றங்கரையோரம் 2 கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கோயம்புத்தூரில் இருந்து வந்துள்ள நிபுணர் குழுவினர், 30 கேமரா டிராப்களுடன் களத்தில் பணியை தொடங்கியுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் பயன்பாட்டுப் பகுதியின் அமைப்பை அறிய காலை நேரங்களில் ட்ரோன் கேமராவும், இரவு நேரங்களில் தெர்மல் ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து சமூக வலை தளங்களில் பரப்பப்படும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.