மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகர பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்று சிறுத்தையை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் ஏப்.2-ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்த தகவல் பரவியதையடுத்து, வனத் துறையினர் மற்றும் போலீஸார் அங்கு சென்று, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளதைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, நாகை மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார் வையில் வனத்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை வீரர்கள் நேற்று முன்தினம் முழுவதும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், சிறுத்தையை கண்டறிய முடியவில்லை. இதற்கிடையே, செம்மங்குளம் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஆரோக்கிய நாதபுரம் பகுதியில் நேற்று சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆரோக்கியநாதபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வனத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் கூறியது:
சிறுத்தையின் நடமாட்டம் மற்றும் அதன் நகர்வுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, ஏற்கெனவே 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். இரவில் வெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும். சிறுத்தையைப் பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 5 சிறப்பு அதிகாரிகள் வர உள்ளனர். வெயில் அதிகமாக இருப்பதால் பகலில் சிறுத்தை நடமாட்டம் இருக்காது. இரவு நேரத்தில் நடமாட்டம் இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக சொல்லப்பட்ட பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவின் பேரில் நேற்று 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்ற பள்ளிகளில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்புடன் மாணவர்கள் தேர்வெழுதினர்.