திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று வெயில் அளவு 104 டிகிரி கொளுத்தியது. இதனால், மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடின.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதி 100 டிகிரியை தொட்டு சதம் அடித்தது. அதற்கு, அடுத்து வந்த நாட்களில் தொடர்ந்து 100 டிகிரியை நெருங்கி வந்த வெயில் அளவு ஏப். 2-ம் தேதி 102 டிகிரியாகவும், ஏப். 3-ம் தேதி 103 டிகிரியாகவும் பதிவானது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் அளவு பதிவானது. இதனால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், இரு சக்கர வாகனங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது.
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் அவதிப்படும் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். வேலை நிமித்தமாக வெளியே வரும் பெண்கள் குடையுடன் செல்கின்றனர். பகல் நேரங்களில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச் சோடி காணப்படுகின்றன. பகலில் கொளுத்தும் வெப்பம் மாலை வரை இருப்பதால் இரவிலும் புழுக்கம் அதிகரித்துள்ளது. உடல் சூட்டை தணிக்க பழச்சாறு, கரும்புச்சாறு, மோர் ஆகியவற்றை பருகுகின்றனர்.
இதனால், திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலையோரம் கேழ்வரகு கூழ், மோர், தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி போன்ற விற்பனை அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் கோடை வெயில் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.