ஓசூர்: வாட்டும் வெயில், நிலத்தடி நீர்மட்டம் சரிவால், ஓசூர் பகுதியில் மலர் மகசூல் 60 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தைக்குப் பூக்கள் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக, சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட மலர்களைச் சந்தை வாய்ப்பு மற்றும் பருவ நிலைக்கு ஏற்ப விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
விலையின்றி கவலை: இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மலர்கள் ஓசூர் மலர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்குச் செல்கிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓசூர் மலர் சந்தையில் சாமந்தி அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.50-க்கும், செண்டுமல்லி ரூ.20, ரோஜா ரூ.40-க்கும் விற்பனையானது. இதனால், போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர்.
தண்ணீர் தட்டுப்பாடு: இதனிடையே, தற்போது நிலவும் கடும் வெயில் உக்கிரத்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மலர் சாகுபடிக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பூக்கள் மகசூல் குறைந்துள்ளது. இதனால், ஓசூர் மலர் சந்தைக்கு வழக்கத்தை விட 80 சதவீதம் வரை பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால், கடந்த வாரங்களை விடப் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்றைய சந்தையில் ஒரு கிலோ சாமந்தி ரூ.200 முதல் ரூ.260-க்கும், ரோஜா ரூ.200, செண்டுமல்லி ரூ.60க்கும், சம்பங்கி ரூ.160-க்கு விலை உயர்ந்ததால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை மழைக்கு எதிர்பார்ப்பு: இது தொடர்பாக மலர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது: ஓசூர் மலர் சந்தைக்குத் தினசரி 10 டன் மலர்கள் விற்பனைக்கு வரும். தற்போது, கோடை தொடங்கியதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து மலர் மகசூல் 60 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், கடந்த நாட்களை விடச் சந்தைக்கு 2 டன் மலர்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
பல விவசாயிகள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி மலர் செடிகளை பராமரித்து வருவதால், அந்த பராமரிப்பு செலவைப் பூக்கள் விலை உயர்வு ஈடு செய்து வருகிறது. வரும் நாட்களில் கோடை மழை பெய்தால் மட்டுமே மலர்ச் செடிகளை நல்ல முறையில் பராமரித்து, மகசூலை அதிகரிக்க முடியும். கோடை மழை இல்லையென்றால் வரும் நாட்களில் சந்தைக்கு மலர்கள் வருகை மேலும் குறைந்து, விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.