ஓசூர்: ஓசூர் அருகே ஜல்லி கிரஷர்களிலிருந்து வெளியேறும் மண், தூசிகளால் விளை நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள முத்தாலி ஊராட்சி அத்தூர் கிராமத்தில் தனியார் ஜல்லி கிரஷர் உள்ளது. இந்த கிரஷர் மூலம் எம்சாண்ட், ஜல்லி, மற்றும் கான்கிரீட் கலவை போன்றவை தயார் செய்து, அதனை அருகே ரிங் ரோடு பணிக்கு டிப்பர் லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. பாதுப்பின்றி கொண்டு செல்வதால், மண் தூசி காற்றில் பறந்து அருகே உள்ள விளை நிலங்களில் உள்ள பயிர்களின் மீது படர்வதால், அப்பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து அத்தூர் கிராமப்பகுதி விவசாயிகள் கூறும் போது, கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், கிராமத்தையொட்டி உள்ள தனியார் கிரஷர் மூலம் வெளியேறும் மண் தூசிகள் பயிர்கள் மீது படர்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து விளை நிலங்கள் பாதிக்காமல் இருக்க, உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.