மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை 9 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
ஆனால், நடப்பாண்டில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், நீர் திறக்கப்படவில்லை. இதனால் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து காணப்படுவதால், குடிநீர் தேவையை அதிகரித்துள்ளது.
எனவே, குடிநீர், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன மாவட்ட மக்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக, குடிநீர், கால்நடை வளர்ப்புக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.
இதனையடுத்து, அணையில் குடிநீர் தேவைக்கு இன்று மாலை 4.30 மணி முதல் விநாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களுக்கு, அணையில் இருந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 3 மாவட்ட மக்கள், கோடையை சமாளிக்க பயன் உள்ளதாக அமையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்மட்டம் 60.77 அடி: மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக, விநாடிக்கு நீர்வரத்து 90 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 60.77 அடியாகவும், நீர் இருப்பு 25.26 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.