தருமபுரி: கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் இரைதேடி தவிக்கும் பறவைகளுக்காக தருமபுரி மாவட்டம் பேளார அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தானியங்களை அளித்து வருகின்றனர்.
பாலக்கோடு ஒன்றியம் பேளாரஅள்ளி அரசு மேல் நிலைப் பள்ளி 5 ஏக்கர் பரப்பு கொண்டது. இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த வளாகத்தில் பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால் மாணவ, மாணவியரின் பங்கேற்புடன் மகிழம், தான்றிக்காய், புன்னை, நாகலிங்கம், மருது, மலைவேம்பு, செம்மரம், திருவோடு, ருத்ராட்சம், சரக்கொன்றை, வில்வம், சொர்க்கம், இயல் வாகை, வசந்தராணி, திப்பிலி, மருது, கருங்காலி உள்ளிட்ட அரிய வகையைச் சேர்ந்த 300 மூலிகை மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக பராமரிக்கப்படும் இந்த மரக்கன்றுகள் தற்போது ஓரளவு வளர்ந்து நிற்கின்றன. பள்ளி தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம் தலைமையில், ஆசிரியர்கள் உஷா, புஷ்பராணி, மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் வேலு ஆகியோரின் வழிகாட்டுதலில் இப்பணிகளை மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இவ்வாறு மரங்கள் வளர்ந்து பசுமை சூழல் நிலவுவதால் இந்த மரங்களை நாடி சிட்டுக் குருவிகள் உள்ளிட்ட பல்வேறு பறவையினங்கள் தினமும் வருகின்றன.
இந்நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் இந்த பறவையினங்கள் இரை மற்றும் தண்ணீர் தேடி தவிப்பதால் மரங்களில் ஆங்காங்கே அட்டை கிண்ணங்களை கட்டி வைத்து அவற்றில் சிறு தானிய இரைகளை நிரப்பி வைக்கின்றனர். அதேபோல, மரங்களுக்கு இடையே ஆங்காங்கே தண்ணீரும் வைக்கப்படுகிறது. உலக சிட்டுக் குருவிகள் தினமாக கடைபிடிக்கப்படும் மார்ச் 20-ம் தேதி ( நேற்று ) பள்ளி வளாகத்தில் பறவைகளுக்கு இரை மற்றும் தண்ணீர் வைக்கும் பணியில் பள்ளி மாணவ, மாணவியர் ஈடுபட்டனர்.
இது பற்றி, மாணவ, மாணவியர் கூறும்போது, ‘மாறி வரும் பல்வேறு சூழல்கள் காரணமாக அழிந்து வரும் சிட்டுக் குருவிகள் கொசுக்களையும், அவற்றின் முட்டைகளையும் உணவாக உட்கொண்டு அழித்து, மனித இனத்துக்கு நன்மை செய்கின்றன. அதேபோல, விதைகளை பரப்புவதன் மூலம் சூழல் மேம்பாட்டுப் பணியிலும் இவை முக்கிய பங்காற்று கின்றன. இவற்றையெல்லாம் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலம் அறிந்து கொண்டு சிட்டுக் குருவிகள் உள்ளிட்ட பறவையினங்கள் பெருக்கத்துக்கான சூழலை எங்கள் பள்ளியில் ஏற்படுத்தியுள்ளோம். இதனால், தற்போது மாலை நேரங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தருகின்றன’ என்றனர்.