சுற்றுச்சூழல்

கூட்டப்புளி, கூடுதாழை, தோமையார்புரம் கிராமங்களில் கடலரிப்பால் இடம்பெயரும் மீனவர்கள்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி, கூடுதாழை, தோமையார்புரம் ஆகிய கடலோர கிராமங்களில் தூண்டில் பாலம் அமைக்காததால் மீனவர்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத் திலுள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை ,தோமையார்புரம், கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். காலநிலை மாற்றத்தினால் கூட்டப்புளி, தோமையார்புரம், கூடுதாழை ஆகிய மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் சேதமடைந்து வருகின்றன.

இதனால், கட்டுமரங்களையும், பைபர் படகுகளையும் கரையில் நிறுத்துவதற்கும், கடலில் இறக்குவதற்கும் மீனவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. டிராக்டர்கள் உதவியுடனேயே படகுகளை கடற்கரையில் இருந்து கரையோரப் பகுதிகளுக் கும், கரையில் இருந்து கடலுக்குள்ளும் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. மேலும், கடல் கொந்தளிப்பு காலங்களில் மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை. இதனால் ஆண்டில் பல்வேறு மாதங்களிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் அரிப்பினால் கடற்கரையை ஒட்டிய சாலைகள், மின் கம்பங்கள், வலைக் கூடங்கள், வீடுகள் ஆகியவை மூழ்கும் அபாயமும் நீடிக்கிறது. மாவட்டத்தில் பல்வேறு மீனவர் கிராமங்களிலும் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டப்புளி, கூடுதாழை, தோமையார்புரம் ஆகிய பகுதிகளில் தூண்டில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், மீனவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இது குறித்து தோமையார்புரம் மீனவர் ஜான்ரோஸ் கூறியதாவது: கடல் அரிப்பால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மீன்பிடித்து திரும்பும்போது ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. தூண்டில் பாலம் அமைத்தால் அச்சமின்றி மீன்பிடிக்க செல்லவும், கரை திரும்பவும் முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடல் அரிப்பால் தற்போது பாறைகள் வெளியே தலைகாட்டுகின்றன.

இதனால் மீன் பிடித்துவிட்டு மீனவர்கள் படகுகளில் வரும்போது அவை பாறைகளில் மோதி சேதம் ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக் கிறார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த கிராமங்களில் உள்ள மீனவ குடும்பங்கள் வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். மாவட்டத்தில் விடுபட்டுள்ள கடற்கரை கிராமங்களில் தூண்டில் பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மீனவர்களின் கோரிக்கையாகும்.

SCROLL FOR NEXT