கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் தொடர்பாக வனத்தையொட்டியுள்ள கிராம மக்களுக்கு எல்இடி டிஜிட்டல் திரை மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. இம்மாவட்டம் மொத்தம் 5.43 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு உள்ளது. இதில், 1.45 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு வனப் பகுதியாக உள்ளது. இதில், 115 காப்புக் காடுகள் உள்ளன. இப்பகுதியில் 150 -க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றன.
யானைகள் வலசை: இந்நிலையில், ஆண்டுதோறும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவிலிருந்து தமிழக வனப்பகுதிக்கு யானைகள் வலசை வரும். இவை கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் சுற்றுவதோடு, ஆந்திரா மாநில வனப் பகுதிக்கும் வலசை செல்வது உண்டு. இவ்வாறு வலசை வரும் யானைகள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து சுற்றுவதோடு, இரவு நேரங்களில் வனத்தை யொட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதோடு, ஊருக்குள் புகுந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
யானைகள் - மனித மோதல்: யானைகள் இவ்வாறு இடம்பெயரும்போது, கிராம மக்களுக்கு யானைகள் நடமாட்டம் குறித்த தகவல்கள் கிடைப்பதில்லை. இதனால், யானைகள்-மனித மோதல் ஏற்பட்டு அண்மைக் காலமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த இரு ஆண்டு களில் கிருஷ்ணகிரி அருகே மகாராஜகடை நாரலப்பள்ளி ஊராட்சியில் மட்டும் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். யானைகள் ஊருக்குள் நுழை வதைத் தடுக்க வனத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
குறுந்தகவல் எச்சரிக்கை: அதன்படி, யானைகள் நடமாட்டம் தொடர்பாக கிராம மக்களின் செல்போன் எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, நாரலப்பள்ளி கூட்டுரோடு மற்றும் சானமாவு உள்ளிட்ட இடங்களில் எல்இடி டிஜிட்டல் திரை அமைத்து அதன் மூலம் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வனத் துறையினர் கூறியதாவது: யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் செல்போன் எண்ணுக்குத் தினசரி இரவு 9 மணிக்குள் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் யானைகள் நடமாட்டம் உள்ள கிராமத்தைக் குறிப்பிட்டு விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி வருகிறோம். தற்போது, நாரல்பள்ளி கூட்டு ரோடு, சானமாவு ஆகிய யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் எல்இடி டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை..விழிப்புணர்வு: இத்திரையில் தினசரி வனப் பகுதியில் யானைகள் நடமாட்டம் எந்த பகுதியில் உள்ளது. எந்த பகுதிக்கு இடம் பெயரும் என்ற தகவலை தெரிவித்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், யானை நடமாட்டம் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகிறோம். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டம் எங்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தங்கள் பணிகளைத் திட்டமிட்டு, யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு செல்வதைத் தவிர்க்க இந்நடவடிக்கை உதவியாக இருந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.