சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் பாக். விரிகுடா பகுதியில் பல்லுயிர் மற்றும் பவளப்பாறைகளை பாதுகாக்க கடல்சார் உயர் இலக்கு படையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்தார்.
மன்னார் வளைகுடா மற்றும் பாக். விரிகுடாவில் கடல் சார்ந்த பல்லுயிர்களையும், பவளப்பாறைகளையும் பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ள கடல்சார் உயர் இலக்கு படை உருவாக்கப்பட்டுள்ளது. இப் படையை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
பாதிப்பை ஏற்படுத்தும் குற்றங்கள் தடுக்கப்படும்
முதல்முறையாக நமது மாநிலத்தில் முன்னுதாரண திட்டமாக கடல் சார் உயர் இலக்கு படையை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். மன்னார் வளைகுடா மற்றும் பாக். வளைகுடா பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்களை பாதுகாக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருக்கும் தாவரங்கள், பவளப்பாறைகள், கடல் குதிரை ஆகியபல்லுயிர்களை பாதுகாக்க இந்த அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் பல்லுயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குற்றங்களும் தடுக்கப்படும். மற்ற கடல் சார்ந்த மாவட்டங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் இந்தப் படையை விரிவுபடுத்த உள்ளோம்.
கோடை காலத்தில் வனப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.