சுற்றுச்சூழல்

முல்லை பெரியாறில் நின்றுபோன நீர்வரத்து: குடிநீர் கிணறுகளில் குறையும் நிலத்தடி நீர்மட்டம்

என்.கணேஷ்ராஜ்

சின்னமனூர்: முல்லை பெரியாற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து வெகுவாக குறைந்து மணல் வெளியாக மாறி விட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், கடந்த ஆண்டு இறுதியில் 141அடியை எட்டியது. நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழைப்பருவம் முடிந்தது. அவ்வப் போது லேசான மழையும், சீரான நீர்வரத்தும் இருந்தது.

இந்நிலையில் சில வாரங் களாகவே அணைக்கான நீர்வரத்து குறைந்தது. இதனால் 141 அடியில் இருந்து நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. நேற்று 122 அடியாக. நீர்வரத்தும், நீர் வெளியேற்றமும் விநாடிக்கு தலா 105 அடியாகவே உள்ளது.

வெளியேற்றப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்ததால் உத்தமபாளையம், வீரபாண்டி, தேனி, அரண்மனைப்புதூர் உள் ளிட்ட பகுதிகளில் முல்லை பெரியாறு மணல் பகுதிகளாக காட்சி அளிக்கின்றன.

ஆற்றுக்கு அருகே உள்ள கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறையத் தொடங்கி உள்ளது. இந்த ஆற்றை ஆதாரமாகக் கொண்டே பல உள்ளாட்சிகள் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துகின்றன.

இந்நிலையில், நீரோட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் சில வாரங்களில் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், சில மாதங்களில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிவிடும். அதன் பிறகே, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT