மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய சாம்பலால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குச் சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக தினமும் 23 ஆயிரம் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.
அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரியை, இயந்திரங்கள் மூலம் பொடியாக்கி, கொதிகலன் வழியாக செலுத்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர், அதிலிருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகையை, கரி பிரிப்பான் இயந்திரம்மூலமாக, சாம்பலை தனியாக பிரித்து, சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை லாரிகள் மூலமாக சிமென்ட் ஆலை மற்றும் செங்கல் உற்பத்திக்கு எடுத்து செல்கின்றனர்.
இந்நிலையில், அனல் மின் நிலைய 2-வது பிரிவில், சாம்பல் சேமிப்பு கிடங்குக்கு செல்லும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, சாம்பல் புகை நேற்று அதிகளவில் வெளியேறியது. இதனால் அனல் மின் நிலையம் சாம்பல் புகையால் முழுமையாக மூடப்பட்டு காட்சியளித்தது.
அதேபோல், அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை, மேட்டூர் நகரம் முழுவதும் பரவி, பனி மூட்டம் போல காட்சியளித்தது. வாகன ஓட்டிகள், முதியவர்கள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பலை பாதுகாப்பான முறையில் அகற்றுவதில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். இரவு நேரங்களில் தான் சாம்பல் புகை வெளியேற்றம் அதிகளவு இருக்கும். தற்போது, பகல் நேரங்களிலே அதிகளவு சாம்பல் வெளியேறி வருவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்’ என்றனர்.
இதுகுறித்து அனல் மின் நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சாம்பல் சேமிப்பு கிடங்கு செல்லும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சரி செய்யப்பட்டு வருகிறது. அதன் பின்னர், சாம்பல் புகை வெளியேறுவது நிறுத்தப்படும்’’ என்றனர்.