சுற்றுச்சூழல்

சிறுத்தை எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 8% அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் 12,852 சிறுத்தைகள் இருந்த நிலையில் 2022-ஆம் ஆண்டில் 13,874 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் தேசிய அளவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 1,022 கூடுதலாக அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது என்பது அர்ப்பணிப்புடன் பல்லுயிர் பேணும் நாடு இந்தியா என்பதற்கான சிறந்த சான்று. இது நற்செய்தி” என்று கூறியுள்ளார்.

சிறுத்தைகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்ட மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவிலுள்ள புலிகளை பாதுகாத்து, அவற்றின் எண்ணிக்கையை உறுதி செய்திட கொண்டுவரப்பட்ட புலிகள் பாதுகாப்பு திட்டத்தின்செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டதால் மேலும் பல உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை சிறுத்தைகள் பற்றிய இந்த ஆய்வு காட்டுகிறது. வனத்துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பு இதில் பாராட்டுக்குரியது” என்று கூறினார்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் இருப்பது இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சத்தீஸ்கர், உத்தராகண்ட், கேரளா, ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

இதுவரை 70% சிறுத்தை வாழ் வனப்பகுதிகளில் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதால் மேலும் அதிக சிறுத்தைகள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT