கோவை: கோவை மணியகாரம்பாளை யம் பேருந்து நிறுத்தம் அருகே, மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகே, 100 அடி தொலைவில் மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் உள்ளது. இக்கழிப்பிடத்தை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சூழலில், கழிப்பிடத்தில் இருந்து கழிவு நீரை முறையாக வெளியேற்றாமல், திறந்தவெளி கால்வாயில் விடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவரும், கல்வி ஆர்வலருமான பெ.முருகேசன், அனைத்து கட்சியினர், பொது மக்கள் உள்ளிட் டோர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து, பெ.முருகேசன் நேற்று கழிப்பிடம் அருகே, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் அங்கு திரண்டனர். மாநகராட்சி வடக்கு மண்டல உதவி ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் அதிகாாிகள் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே.அர்ச்சுணனும் அங்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். கழிவுகள் திறந்தவெளி கால்வாயில் வெளியேறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எம்எல்ஏ எச்சரித்தார். தொடர்ந்து கல்வி ஆர்வலர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி கூறும்போது,‘‘இந்த வார்டின் கவுன்சிலராக மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளார். இங்குள்ள பொதுக் கழிப்பிடத்தில் இருந்து தினமும் லாரி மூலம் கழிவுகளை அகற்றுவதில்லை. அவை திறந்தவெளி சாக்கடை கால்வாயில் விடப்படுகிறது. பள்ளியை ஒட்டிய இந்த சாக்கடை கால்வாய் அண்ணாநகர் வழியாக சென்று சங்கனூர் பள்ளத்தில் கலக்கிறது. கழிப்பிடக் கழிவுகள் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் படிக்க முடிவதில்லை. அருகில் உள்ள அம்மா உணவகத்துக்கு வருபவர்கள் சாப்பிட முடிவதில்லை. இவ்வார்டுக்குட்பட்ட ராஜ ரத்தினம் வீதியிலும் இதே நிலைதான் உள்ளது’’ என்றார்.