சுற்றுச்சூழல்

மூணாறில் லாரியை மறித்து காரை சேதப்படுத்திய யானை

செய்திப்பிரிவு

மூணாறு: மூணாறு - உடுமலைப்பேட்டை வழித்தடத்தில் உள்ளது மறையூர். இங்குள்ள நயமக்காடு எஸ்டேட் அருகே காட்டு யானை அடிக்கடி சாலையை கடப்பதும், அப்பகுதியில் நட மாடுவதும் வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை 8.30 மணி யளவில் இந்த யானை சாலைக்கு வந்தது. அப்போது, அச்சாலையில் வந்த சரக்கு லாரியால் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், யானை லாரியை லேசாக பின்னுக்கு தள்ளியது. ஓட்டுநர் லாரியை பின்னோக்கி நகர்த்திச் சென்றதால், யானை அங்கேயே நின்றது. சிறிது நேரத்தில் அப்பகுதியில் வந்த இன்னொரு காரை தந்தத்தால் தள்ள முயன்றது. இதில் காரின் மேற்கூரை சேதமடைந்தது.

இதையடுத்து, மற்ற வாகனங்களில் இருந்தவர்கள் சப்தம் எழுப்பியும், ஹாரனை ஒலிக்க செய்தும் யானையை விரட்டினர். வனத்துறையினர் கூறுகையில், யானை குறுக்கிட்டால் இன்ஜினை அணைக்காமல் வாகனங்களை நிறுத்த வேண்டும். சிறிது நேரத்தில் யானை அதுவாகவே விலகிச் சென்றுவிடும். எந்தவிதத்திலும் யானையை பதற்றமடையச் செய்யக்கூடாது என்றனர்.

SCROLL FOR NEXT