சுற்றுச்சூழல்

ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் நகரின் நிலத்தடி நீர்மட்டத் துக்கு ஆதாரமாக இருந்த ராம நாயக்கன் ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

ஓசூர் மாநகராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சுமார் 156 ஏக்கர் பரப்பளவில் ராமநாயக்கன் ஏரி உள்ளது. பூனப்பள்ளி ஏரி, ஜீகூர் ஏரி, தாசரப்பள்ளி ஏரி, கல்லேரி, கர்னூல் ஏரி, அந்திவாடி ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாய் மூலம் ராமநாயக்கன் ஏரிக்கு வந்தடையும். இந்த ஏரி கடந்த 1980-ம் ஆண்டு வரை நிரம்பி வந்தது. இதன் மூலம் பல ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெற்று வந்தது. மேலும், ஓசூர் நகரப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரத்துக்குப் பெரிதும் உதவி வந்தது.

இதனால், கோடைக் காலத்திலும் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாகவும், குடியிருப்புகளும், வணிக வளாக கட்டிடங்கள் அதிகரித்ததாலும், ஏரியைச் சுற்றிலும் வணிக வளாகங்கள், தனியார் மருத்துவமனை, திருமண மண்டபங்கள், உணவகங்கள் எனக் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் ஏரியின் பரப்பளவு குறைந்தது. இதையடுத்து, நீர்வரத்து கால்வாய் வழியாகத் தண்ணீர் வரத்து குறைந்து ஏரி நிரம்புவது கேள்விக்குறியானது.

இதனிடையே, ஏரியைச் சுற்றி உள்ள மருத்துவமனை மற்றும் திருமண மண்டபங்களிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் பெரிய குழாயைப் பதித்து ஏரியில் நேரடியாகக் கலக்கிறது. இதனால், ஏரி முழுவதும் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, ஏரி நீர் எதற்கும் பயன்படுத்த முடியாத அளவில் மாசடைந்துள்ளது. இதனால், நீர்வள உயிரினங்கள் அடிக்கடி உயிரிழக்கும் நிலையுள்ளது. எனவே, ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: ஒரு காலத்தில் பாசனத்துக்கும், நிலத்தடி நீர் மட்டத்துக்கும் ஆதாரமாக ராமநாயக்கன் ஏரி இருந்தது. தற்போது, சாக்கடை கழிவு நீர் சங்கமிக்கும் இடமாக மாறிவிட்டது. மேலும், ஏரியின் கரைப்பகுதியில் இறைச்சிக் கழிவு உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படும் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.

ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுத்து, நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைக் காலங்களில் ஏரியில் தண்ணீரைச் சேமித்தால், இப்பகுதியில் நிலத்தடி நீர் தட்டுப் பாடுக்குத் தீர்வு கிடைக்கும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுநலன் கருதி ஏரியில் சாக்கடை கழிவு நீரை கலப்பதையும், குப்பை கொட்டுவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT