மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வலியுறுத்தியும், ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேற்று மயிலாடுதுறை நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள தமது முகாம் அலுவலகத்தில் இருந்து, ஆட்சியர் அலுவலகம் வரை அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
பேருந்தில் டிக்கெட் எடுத்துக் கொண்டு, நின்று கொண்டே பயணித்த ஆட்சியர், பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, அதிகளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி உள்ளிட்ட அதிகாரிகள் ஆட்சியருடன் பேருந்தில் பயணித்தனர்.