திருநெல்வேலி: தமிழக பட்ஜெட்டில் தாமிரபரணி பாதுகாப்புக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த தொகையை முறையாக செலவிட்டு நதியின் புனிதத்தை காக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் தாமிரபரணி ஆறு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் சாகுபடிக்கு மட்டுமின்றி 7 மாவட்ட மக்களின் தாகம் தணிக்கும் குடிநீராக பயன்படுகிறது.
இந்த ஆற்றை தூய்மையாக பராமரிக்க அரசுத்துறைகள் போதிய அக்கறை செலுத்தவில்லை என பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் குற்றஞ் சாட்டுகின்றனர். சமீபத்தில் ஆற்றில் கழிவுநீர் அதிகளவில் கலப்பது குறித்து அவர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசு சட்டப் பேரவையில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.200 கோடியில் தாமிரபரணி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு தாமிரபரணி மீது அக்கறையுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நம் தாமிரபரணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாமி நல்லபெருமாள் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில் தாமிரபரணி பாதுகாப்புக்காக ரூ. 200 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் திருநெல்வேலி தூத்துக்குடி பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். அதேநேரத்தில் இந்த நிதியை முறையாக செலவிட்டு நதியின் புனிதத்தை காக்கவும், அதில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும் நீண்டகால திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
தாமிரபரணி ஆற்றின் ஆரம்ப பகுதி முதல், கடலில் கலக்கும் புன்னகாயல் வரை டிஜிட்டல் சர்வே செய்து சர்வே கற்களை நிறுவி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும். பரிகாரம் செய்ய தனியிடம் ஒதுக்கீடு செய்து, பரிகாரத் துணிகள் ஆற்றில் விழாமல் தடுக்க வேண்டும். கழிவுநீர், பாதாள சாக்கடை நீரை திருநெல்வேலி மாநகாரட்சியே ஆற்றில் கலக்கும் நிலை உள்ளது. இதை முழுமையாக தடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை குழாய்கள் ஆற்றின் வழியாக செல்வதால் வெள்ள காலங் களில் உடைப்பு ஏற்பட்டு ஆற்றில் சாக்கடை கலப்பதை தடுக்க இரு கரைகளிலும் அரசு புறம்போக்கு நிலங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அதில் சுத்திகரிப்பு செய்து அந்த நீரை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்த குறைந்த விலைக்கு வழங்கலாம் இதன்மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு தெரிவித்தார்.