திருச்சி: திருச்சி பெல் நிறுவனத்தின் பூங்காவில் போதிய பராமரிப்பின்றி புள்ளி மான்கள் அடிக்கடி உயிரிழப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிராணிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் கைலாசபுரத்தில் புத்தாயிரம் பூங்கா எனப்படும் மான் பூங்கா உள்ளது. இங்கு 1980-களில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவிலிருந்து 12 புள்ளி மான்களை பெல் நிர்வாகம் கொண்டு வந்து வளர்க்கத் தொடங்கியது. அதன் பின், கடந்த 40 ஆண்டுகளில் பல்கி பெருகி 2018-ல் 249 புள்ளி மான்கள் இருந்தன. இந்தநிலையில் தற்போது இங்கு 77 புள்ளி மான்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மான்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக குறையத் தொடங்கியதற்கான காரணத்தை கண்டறிந்து, இறப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிராணிகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து திருச்சியைச் சேர்ந்த பிராணிகள் நல ஆர்வலர் கார்த்திக் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: வயது மூப்பு மற்றும் சண்டையில் காயமடைதல் ஆகியவற்றால் மான்கள் இறந்தாலும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டுமே ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட மான்கள் இறந்துள்ளன. இதற்கு காரணம் மான்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படவில்லை. இவைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவரும் இல்லை. மேலும், மான்களை பராமரிக்க பெல் நிர்வாகம் தனது சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் நிதியும் ஒதுக்கவில்லை. இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு மான்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பெல் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மான்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டு காயமடைந்து இறந்து விடுகின்றன. மான் இறந்தால், அரசின் கால்நடை மருத்துவர், வனச் சரகர் ஆகியோர் வந்து பார்வையிட்டு, பிரேத பரிசோதனை செய்யப் படுகிறது. பெல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக லாபமில்லாமல் இயங்குவதால், சமூக பொறுப்புணர்வுத் திட்ட நிதியும் இல்லை. மான்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி வனத்துறையினரும் கேட்டனர். ஆனால், அது பேச்சளவிலேயே உள்ளது. எழுத்துப் பூர்வமாக கடிதம் அளித்தால், அது தொடர்பாக பரிசீலிக்கப்படும்’’ என்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பெல் பூங்காவில் உள்ள மான்களை காடுகளில் கொண்டு விட முடியாது. திருச்சி எம்.ஆர். பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்கும் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. அங்கு பூங்கா அமையும் போது அங்கு இந்த மான்களை கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.