அரூர்: கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் கோட்டப்பட்டி வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க 40 கி.மீ. தூரத்துக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, மொரப்பூர் ஆகிய 4 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் குரங்குகள், மான்கள், காட்டுப் பன்றிகள், முயல்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் மற்றும் மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் வசித்து வருகின்றன. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வனப் பகுதிகளில் எளிதில் தீப்பற்றக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் வனப் பகுதியில் உள்ள மரங்கள் மட்டுமின்றி விலங்குகளும் உயிரிழக்கும் சூழல் உள்ளதால் இதனை தடுக்கும் பொருட்டு வனத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அதில் ஒன்றாக 20 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கோட்டப்பட்டி வனப் பகுதியில் 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வனப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள் மற்றும் தீ விபத்து ஏற்படக் கூடிய இடங்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டு அப்பகுதியில் மூன்று மீட்டர் மற்றும் 6 மீட்டர் அகலத்திற்கு உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூய்மைப் படுத்தும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. வனப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் தீ பரவுவது தீ தடுப்புக் கோடுகள் மூலம் கட்டுப் படுத்தப்படுமென வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.