சேலம்: சங்ககிரியை அடுத்த இடங்கண சாலை நகராட்சியின் கழிவு நீரை சுத்திகரித்திட, சாத்தம் பாளையம் கிராமத்தில் உள்ள சின்ன ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சங்ககிரியை அடுத்த இடங்கணசாலை அருகே கஞ்சமலை புதூர், ஈ.காட்டூர், மெய்யனூர், சாத்தம்பாளையம், ராசிகவுண்டனூர், கே.கே.நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சின்ன ஏரி இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். புகார் மனு அளிக்க வந்த அவர்களில் சிலர், அசுத்தமான நீர் அடங்கிய பாட்டில்களையும் எடுத்து வந்திருந்தனர்.
பிரச்சினை குறித்து அவர்கள் கூறியது:
சங்ககிரியை அடுத்த இடங்கணசாலை அருகே கஞ்சமலை புதூர், ஈ.காட்டூர், மெய்யனூர், சாத்தம்பாளையம், ராசி கவுண்டனூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்கு சாத்தம்பாடி சின்ன ஏரி பகுதியில், இடங்கணசாலை நகராட்சி சார்பில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த இடத்தின் அருகே பள்ளிகள், கோயில்கள், சத்துணவு மையம், கால்நடை மேய்ச்சல் நிலம் ஆகியவை உள்ளன.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அருகே ஏற்கெனவே, குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நுண்ணுயிர் உர சாலை, மின் மயானம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இதனால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் கெட்டு விட்டதுடன், காற்று மாசும் அதிகரித்துள்ளது. இதனால், மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, அவதிப்பட்டு வருகிறோம். நிலத்தடி நீர் மாசடைந்துவிட்டதால், குடிநீரின் தரம் வெகுவாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இடத்தின் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடும். இதனால், மக்களுக்கான குடிநீர் மட்டுமின்றி, பாசனத்துக்கான நீரும் மாசடைந்துவிடும். மக்களின் சுகாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுவிடும்.
எனவே, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழக முதல்வர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
இதன் பின்னர் இடங்கணசாலை நகராட்சி மூலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பொதுமக்கள், நகராட்சி கவுன்சிலர்கள், துணைத் தலைவர் உள்ளிட்ட அனைவரும், சின்ன ஏரியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தோம். இதையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாட்டோம் என உறுதியளித்தனர்.
ஆனால், கடந்த 31-ம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் வாழ்வாதாரம், சுகாதாரம் ஆகியவற்றை பேணிக்காக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு, சின்ன ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும், என்றனர்.