கோவை வனப்பகுதியில் இருந்து வெளியேறி தடாகம் பகுதியில் சுற்றித் திரிந்த யானை. (கோப் பு படம்) 
சுற்றுச்சூழல்

சுருங்கிய வலசைப்பாதை - ஆண்டுக்கு 3000 முறை வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் @ கோவை

ஆர். ஆதித்தன்

கோவை: கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இருந்து ஆண்டுக்கு 3 ஆயிரம் முறை யானைகள் வெளியேறியுள்ளன. அந்த வகையில், கடந்த 2021-2023 முதல் மூன்று ஆண்டுகளில் சுமார் 9,028 முறை யானைகள் வனத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை வனக்கோட்டம்கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்களை கொண்டதாகும். நாட்டிலேயே மிக அதிகமாக கோவை மாவட்டத்தில் மனித-யானை மோதல் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை யானை தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 176 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக அதிகரித்திருக்கும் மனித-யானை மோதலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்புநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மதுக்கரை வனச்சரகத்தில் தண்டவாளத்தைக் கடக்கும் யானைகள் ரயில் மோதிஉயிரிழப்பதை தடுக்கும் வகையில்செயற்கை நுண்ணறிவு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக கோவை மாவட்ட வனக்கோட்டத்தில் சுமார் ரூ.7.24 கோடி மதிப்பில்இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் உணவைத் தேடி வனத்தையொட்டிய கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வெளியேறி வருவதால் விளை நிலங்கள் சேதமாவதுடன், யானை தாக்குதலால் மனித உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.

கோவை மாவட்டத்தில் கடந்த 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை9,028 முறை யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி உள்ளதாக மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கோவை வனக்கோட்டத்தில் அதிகரித்து வரும் யானைகளின் எண்ணிக்கை, இடம்பெயர்தல் வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகள், விவசாய நிலப் பயன்பாட்டு முறை மாற்றங்கள் ஆகிய காரணிகள் மனித-யானை மோதலுக்கு வித்திடுகின்றன.

ஆண்டுக்கு 3,000 முறை யானைகள் வனத்தைவிட்டு வெளியேறுகின்றன. மாதம்தோறும் சராசரியாக 250 முறை யானைகள்வனத்தைவிட்டு வெளியேறுகின்றன.

இதுபோல கடந்த 3 ஆண்டுகளில் 9,028 முறை யானைகள் வனத்தை விட்டு வெளியேறி உள்ளன. மனித-யானை மோதலைத் தடுக்கவும், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைதடுக்கும் வகையிலும் பல்வேறு செயல்திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது, என்றார்.

இதுதொடர்பாக ஓசை அமைப்பின் காளிதாசன் கூறியதாவது: கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதி ஆசிய யானைகளின் வாழ்விடமாக உள்ளது. முதுமலை, பந்திப்பூர் மலைப் பகுதியில் இருந்து வரும் யானைகள், சமவெளிப் பகுதியான சத்தியமங்கலம், சிறுமுகை, எட்டிமடை வரை வந்து கேரளா செல்கின்றன. யானைகள் உணவு தேடி இடம்பெயர்கின்றன.

யானைகளின் வலசைப் பாதை தடைபடுவதாலும், சுருங்கியதாலும் அவை வனத்தைவிட்டு வெளியேறுகின்றன. வனப்பகுதியையொட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை உணவாக உட்கொள்கின்றன. ஓராண்டில் 3 ஆயிரம் முறை யானை வெளியேறுவது நல்லதல்ல. யானைகள் வனத்தைவிட்டு வெளியே வராமல் தடுக்க நவீன தொழில்நுட்பங்களை அரசு பயன்படுத்த வேண்டும். வனப் பணியாளர்கள் களப்பணி செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும், என்றார்.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், கோவைவனக்கோட்டத்தில் தடாகம் பகுதியில் அதிகளவில் நகரமயமாக்கல் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் யானைகள் அதிகளவில் வனத்தைவிட்டு வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வனத்துறை இப்பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT