போடி: போடிமெட்டு மலைப்பாதையில் மூடுபனி சாலையை வெகுவாய் மறைத்து விடுவதால் கொண்டை ஊசிவளைவுகளில் வாகன இயக்கம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆகவே, முகப்பு விளக்குகளை எரியவிட்டு திருப்பங்களில் ஹார்ன் ஒலி எழுப்பியபடி மெதுவாக பயணிக்க நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் அருகே உள்ள மூணாறு கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தேயிலை தோட்டங்களும், பசுமையான மலைத் தொடர்களும் அதிகம் உள்ளன. இதனால் ஆண்டு முழுவதும் குளிர்பருவநிலை நீடிக்கும். குறிப்பாக டிசம்பர் இறுதி முதல் பிப்ரவரி வரை கடும் குளிர்காலம் ஆகும். இதனால் வெப்பநிலை 4 டிகிரியாக குறைந்துள்ளது.
குறிப்பாக, தேவிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கடும்பனிப் பொழிவு உள்ளது. இந்த பருவநிலை தமிழக எல்லையான போடிமெட்டு வரை நீடிக்கிறது. பகலிலும் சாலைகளில் மூடுபனி அதிகளவில் பரவி நிற்கிறது.
போடிமெட்டு பகுதியைப் பொறுத்தளவில் போடி அருகே முந்தலில் இருந்து 20 கிமீ.தூரத்தில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இப்பாதையில் மூடுபனி அதிகம் பரவி கிடப்பதால் பகலில் கூட எதிரெதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் முகப்பு விளக்குகளுடனே வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் கொண்டை ஊசி வளைவுகள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
அடர்த்தியாக பரவி கிடக்கும் மூடுபனியினால் திருப்பங்களில் எதிரே வாகனம் வருவதை உணர முடிவதில்லை. ஆகவே பலத்த ஹார்ன் எழுப்பியபடி வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. குறிப்பாக மேலே ஏறும் வாகனங்களின் ஹார்ன் ஒலியை வைத்து கீழிறங்கும் வாகனங்கள் ஓரமாக நிறுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வளைவிலும் இதுபோன்ற நிலை தொடர்வதால் கீழ் இறங்கும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பின்பு செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், ''தற்போது மூடுபனியின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் வாகனங்களை கவனமாக இயக்க வலியுறுத்தி உள்ளோம். குறிப்பாக கொண்டை ஊசி வளைவுகளில் ஹார்ன் அடித்து மெதுவாக நகர்ந்து செல்ல வேண்டும். இதுகுறித்து முந்தல் மற்றும் போடிமெட்டு சோதனைச் சாவடிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது, மலைச்சாலையில் வாகனம் ஓட்டி அனுபவம் இல்லாதவர்கள் சில வாரங்கள் இங்கு வருவதை தவிர்ப்பது நல்லது'' என்றனர்.