புதுடெல்லி: இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளன என்று மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவின் பனிசூழ்ந்த மலைப் பகுதிகளில் பனிச்சிறுத்தைகள் காணப்படுகின்றன. சர்வதேச அளவில் 7,000 பனிச்சிறுத்தைகள் மட்டுமே உள்ளன. தோல்மற்றும் உடல் பாகங்களுக்காக இவை வேட்டையாடப்பட்டு வருகின்றன.
இதனால் பனிச்சிறுத்தைகள் விலங்கினம் அழிவில் இருப்பதாக சர்வதேச விலங்கியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் டெல்லியில் நேற்று ஆய்வறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் இமயமலைப் பகுதியில் பனிச்சிறுத்தைகள் வாழ்கின்றன. லடாக், ஜம்மு-காஷ்மீர்,இமாச்சல பிரதேசம், உத்தரா கண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் கடந்த 2019முதல் 2023-ம் ஆண்டு வரை பனிச்சிறுத்தைகள் தொடர்பாக அறிவியல்பூர்வமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மிக அதிகபட்சமாக லடாக் இமயமலைப் பகுதிகளில் 477 பனிச்சிறுத்தைகள் உள்ளன. உத்தராகண்டில் 124, இமாச்சல பிரதேசத்தில் 51, அருணாச்சல பிரதேசத்தில் 36, சிக்கிமில் 21, ஜம்மு-காஷ்மீரில் 9 பனிச் சிறுத்தைகள் உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விலங்கியல் நிபுணர்கள் கூறும்போது, ‘‘நகரமயமாக்கம், சுரங்கம்,பருவநிலை மாறுபாடு காரணமாகவும் பனிச்சிறுத்தைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான், மேற்கு சீனா, மங்கோலியா மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதிகளிலும் பனிச்சிறுத்தைகள் உள்ளன. அந்த நாடுகளைவிட இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது’’ என்றனர்.