நாமக்கல்: கோதாவரி - காவிரி ஆறு இணைப்பு திட்டத்தை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல்லில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்க மாநில தலைவர் ரா.வேலுசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு முதல் இரு ஆண்டுகள் கரோனா வைரஸ் பரவலாலும், அதன் பின்னர் பருவம் தவறி பெய்த பருவ மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இதனால், வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன் மற்றும் விவசாய அபிவிருத்திக் கடன் உள்ளிட்ட கடன்களைத் திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, பிப்.1-ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் ரத்து செய்து அறிவிக்க வேண்டும். உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு விவசாயிகளே குழு அமைத்து விலை நிர்ணயம் செய்யும் வகையில் நடப்பு கூட்டத் தொடரில் சட்டம் இயற்ற வேண்டும். கோதாவரி-காவிரி ஆறு இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகள் மற்றும் அணைகளையும் தேசிய மயமாக்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். அதன் பின்னர் மத்திய அரசே ஒவ்வொரு மாநிலத்துக்கும், சாகுபடி பரப்பளவுக்கு ஏற்ப நதி நீரை பகிர்ந்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சங்க மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், பொருளாளர் ராஜேஷ், துணைத் தலைவர் ராஜா பெருமாள், மண்டலச் செயலாளர்கள் வெங்கடபதிரெட்டி ( வேலூர் ), ராஜேந்திரன் ( மதுரை ), மாவட்ட தலைவர்கள் பொன்னுசாமி ( நாமக்கல் ), வேல்முருகன் ( சேலம் ) உட்பட பலர் கலந்து கொண்டனர்.நாமக்கல்லில் நடைபெற்ற உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் சங்க மாநில தலைவர் ரா.வேலுசாமி பேசினார்.