சிவகங்கை: சிவகங்கையை சுற்றி சாலை யோரங்களில் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.
செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள், சட்ட விரோதமாக திறந்தவெளியில் கொட்டுவதைத் தடுக்க அரசு விதிமுறை வகுத்துள்ளது. அதன் படி, செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களில் ரூ.2,000 செலுத்தி உரிமம் பெற வேண்டும். வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருக்க வேண்டும். அகற்றப்படும் கழிவுகளை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். அங்கு 6 ஆயிரம் லிட்டர் வரை ரூ.200, அதற்கு மேல் ரூ.300 கட்ட ணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் கொட்டினால் முதல் முறைக்கு ரூ.25 ஆயிரம், 2-வது முறைக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும். அது தொடர்ந்தால், உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். சிவகங்கை நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளை, முத்துப்பட்டியில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்ட வேண்டும். ஆனால், செப்டிக் டேங்க் கழிவு அகற்றும் வாகனங்கள், சிவகங்கையை சுற்றி சாலை யோரங்கள், விவசாயப் பகுதிகள், நீர்நிலைகளில் கொட்டுகின்றனர்.
மேலும், ஜிபிஎஸ் கருவி பொருத்துவது போன்ற எந்த விதிமுறையையும் பின்பற்றுவதில்லை. இதை நகராட்சி அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவ தோடு, நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க, மாவட்ட ஆட்சி யர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலி யுறுத்துகின்றனர்.